நெருங்கும் தீபாவளி பண்டிகை...! - தஞ்சையில் களைகட்டும் பலகார எண்ணெய் சட்டிகள், அடுப்புகள் வியாபாரம்
’’கேஸ் அடுப்புகள் வந்தாலும், இரும்பு அடுப்பில் விறகு வைத்து முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பொருட்களை செய்தால் நல்ல ருசியுடன் இருக்கும் அதனால் ஒரு சிலரே இந்த விஷயம் தெரிந்து கொண்டு வாங்கி செல்கின்றனா்’’
தீபாவளி பண்டியை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் முறுக்கு, அதிரசம், தட்டை, சீப்பு முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்க பயன்படும் எண்ணெய் சட்டிகள், அதற்கு தேவைப்படும் இரும்பு அடுப்பு, சாரணி, முறுக்கு அச்சுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. முன்னோர் காலத்தில் தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்து வந்த நரகாசுரன் என்ற அரக்கனை அழிக்க வேண்டும் என கிருஷ்ணனிடம் தேவர்கள் முறையிட்டனர். இதையடுத்து மகாலட்சுமியின் அம்சமான சத்தியபாமா நரகாசுரனை வதம் செய்தாள். அப்போது நரகாசுரன் தான் இறந்த இந்த நாளை எல்லோரும் கொண்டாட வேண்டும் என சத்தியபாமாவிடம் வேண்டி கொண்டான். நரகாசுரன் அழிந்த அந்த நாள் தான் தீபாவளி பண்டிகையாக நாம் கொண்டாடுகிறோம். அன்றைய தினம் முறுக்கு, அதுரசம், சீடை, கைமுறுக்கு, சீப்பு முறுக்கு, சோமாசா, கெட்டி உருண்டை, நெய்உருண்டை உள்ளிட்டபல வகையான பலகாரங்களை செய்து, பட்டாசு வெடித்து, புத்தாடைகளைஅணிந்து மகழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்கிறோம். இந்த தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலுார், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மையப்பகுதியாகவும், வர்த்தக கேந்திரமாகவும் திகழும் தஞ்சாவூரில் தீபாவளி பண்டிகை உற்சாகம் தற்போது தொடங்கியுள்ளது.
அந்த விழாவினை முன்னிட்டு இரும்பு அடுப்பு, இரும்பு எண்ணை சட்டி, அலுமினியம் மற்றும் பித்தளை முறுக்கு அச்சு, சாரணிகள் விற்பனை செய்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கடையின் உரிமையாளா் கூறுகையில், பொது மக்கள் இனிப்புகளையும், பலகாரங்களையும் செய்ய பயன்படும் எண்ணெய் சட்டிகள், அடுப்பு, சாரணி, முறுக்குகள் தற்போது மதுரை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏராளமாக வந்துள்ளது. இந்த பொருட்கள் தஞ்சாவூர் கீழவாசல், அய்யங்கடைத்தெரு, கும்பகோணம் கும்பேஸ்வரன்கோவில் தெற்கு வீதி, சன்னதி தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் உள்ள இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், பாத்திர கடைகளிலும் இந்த எண்ணெய் சட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.250 முதல் ரூ.400 வரை உள்ள எண்ணை சட்டிகளும், ரூ 150 முதல் ரூ 500 வரை அடுப்புகளும்,ரூ 25 முதல் ரூ150 வரை சாரணியும்,முறுக்கு அச்சுகள் 5 வில்லைகளுடன் ரூ 150 முதல் ரூ 600 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளிக்கு பலகாரங்கள் செய்ய இந்த எண்ணெய் சட்டிகள் தான் முக்கியம். இதனால் தான் பொதுமக்கள் இதனை புதிதாக வாங்கி செல்வார்கள். கும்பகோணத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் இதை விற்பனை செய்கிறோம். நாள்தோறும் 500 க்கும் மேற்பட்ட எண்ணெய் சட்டிகள் அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தற்போது கேஸ் அடுப்புகள் வந்தாலும், இரும்பு அடுப்பில் விறகு வைத்து முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பொருட்களை செய்தால் நல்ல ருசியுடன் இருக்கும் அதனால் ஒரு சிலரே இந்த விஷயம் தெரிந்து கொண்டு வாங்கி செல்கின்றனா். கேஸ் அடுப்பில், ரெடிமேட் மாவுகளை வாங்கி வந்து சில்வா் எண்ணை சட்டியில் பதார்த்தங்களை சமையல் செய்தால் ருசி அவ்வளவாக இருக்காது ஏதோ உணவு பொருள் போல் மட்டுமே தெரியும் . ஆனால் பல நாட்கள் தரமானதாக இல்லாமல், நாற்றம் வீசும் நிலை ஏற்படும். ஆனால் இரும்பு சட்டியில், முறுக்கு மாவுகளை கைகளால் அரைத்து, விறகு வைத்து சமைத்தால் அனைத்து பதார்த்தங்களும் நல்ல ருசியுடனும், மனமுடனும் பல நாட்கள் கெட்டு போகாமலும் அப்படி தரமுடன் இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு தீபாவளி சீர் வரிசையாக முறுக்கு அச்சு, சாரணி, தோசை கல், ஆப்பசட்டி உள்ளிட்ட வீடடிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பெண் வீட்டிலிருந்து கொடுப்பார்கள் என்றார்.