மணக்கும் வெட்டிவேர்... அருமையான வருமானம் பார்க்கலாம்ங்க!!!
தமிழில் வெட்டிவேர் என்றும், வடமாநிலங்களில் கஷ் என்றும் அழைக்கப்படும் புல் வகை தாவரத்தின் நறுமணம் வீசும் வேர்கள் பலவித பயன்பாடுகளைக் கொண்டது.
தஞ்சாவூர்: வெட்டிவேர் சாகுபடியில் அருமையான வருமானம் பார்க்கலாம், அழகு சாதன மருந்து பொருட்களிலும் வெட்டிவேர் மணம் மூட்ட பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெட்டிவேர் என்றும், வடமாநிலங்களில் கஷ் என்றும் அழைக்கப்படும் புல் வகை தாவரத்தின் நறுமணம் வீசும் வேர்கள் பலவித பயன்பாடுகளைக் கொண்டது. இதிலிருந்து நறுமண எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. பல்வேறு வணிக நறுமண உற்பத்திக்கும், அரோமா தெரப்பி எனப்படும் நறுமண மருத்துவ உபயோகத்திற்கும் உணவு மற்றும் வாசனை தொழிற்சாலைகளிலும், மேலும் அழகு சாதன மருந்து பொருட்களிலும் மணம் மூட்ட பயன்படுத்தப்படுகிறது.
பலவகையிலும் பயன்படுத்தப்படும் வெட்டிவேர்
இந்த நறுமண வேர்கள் நேரடியாக தலையணை ஆகவும், கூடையாக பின்னப்பட்டும், ஊதுபத்தியாகவும் ஆடைகளின் இடையில் வைக்கப்படும் வாசனை பைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. உலக உற்பத்தியான 300 டன் என்ற அளவு உற்பத்தி செய்யப்படும் வெட்டிவேர் எண்ணெய் இந்தியாவில் 20 டன் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ஆண்டிற்கு சுமார் 100 டன் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மீதமுள்ள 80% தேவைக்கு இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா முதலிய கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே வெட்டிவேர் சாகுபடி செய்யும் பரப்பினை அதிகரிக்க ஏற்ற சூழல் உள்ளது. வெட்டிவேர் பொதுவாக சரிவிற்கு குறுக்கான கரைகளில் நடப்பட்டு வருகின்றது
உத்தரபிரதேசம் முதலான வட மாநிலங்களில் வளரும் வெட்டிவேர் உலகத் தரமான எண்ணெய் தரவல்லது. தமிழகம் முதலான தென் மாநிலங்களில் அதிக விளைச்சல் கிடைக்கும். தென்னிந்தியாவில் உள்ள வெட்டிவேர் ரகங்கள் தடிமனான தண்டும், அகல இலையும், குறைவான கிளைக்கும் தன்மையுடைய நீண்ட வேர்களையும் உடையவை. விதைகள் முளைக்காத தன்மையை கொண்டிருக்கும். இவை வேர்க்கட்டைகள் மூலம் நடவு செய்ய ஏற்றவை ஆகும். தென்னிந்திய வகையில் பூசா கலப்பினம் –ஏழு, கலப்பினம்-8, சுகந்தா கேஎச்-8, கேஎச்- 40 மற்றும் ஓடிவி - 3 போன்ற வணிக முறை சாகுபடிக்கான ரகங்கள் ஆகும்.
தென்னிந்திய வகை வெட்டிவேர்
தென்னிந்திய வகை வெட்டிவேர் 15- 20 சென்டிமீட்டர் தரைமட்ட தண்டும், உயர மேல் பகுதியும் கொண்ட வேர்க்கட்டைகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். வடிகால் தன்மையுடைய மணல் கலந்த இருப்பொறை மண் மற்றும் கரிம சத்துள்ள செம்பொறை மண் வெட்டிவேர் சாகுபடிக்கு ஏற்றது. களிகலப்பு மண்ணில் சாகுபடி செய்யலாம். ஆனால் களிமண்ணில் சாகுபடி செய்ய முடியாது. கவர் மற்றும் உவர் நிலங்களில் கார அமிலத்தன்மை 8.5 -10 வரை தாங்கி வளரும். நீர் தேங்கினாலும் பாதிப்பில்லை. நீரில் கரைந்த கடின தனிமங்களான ஆர்சனிக், குரோமியம், பாதரசம், காரியம் இவற்றை உறிஞ்சக்கூடியது. தென்னிந்தியாவில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடவு பருவம் ஆகும்.
நிலம் தயாரிப்பு மற்றும் நடவு எப்படி செய்வது?
ஆழமாக உழவு செய்தல் நன்று. இரண்டு முதல் மூன்று முறை 20- 25 சென்டிமீட்டர் ஆழத்திற்கு உழவு செய்து பல பருவ களைச்செடிகளை அகற்றி 10 டன் தொழுவுரத்தையும், அடியுரத்தையும் கடைசி உழவில் இடவும். பண்படுத்திய நிலத்தில் 1 மீட்டர் அகலமும், வயலின் நீளமும் உள்ள மேட்டுப்பாத்திகள் அமைத்து 45க்கு30 அல்லது 60க்கு 30 என்ற இடைவெளியில் அடிக்கட்டை பக்க தூர்களை 10 சென்டிமீட்டர் ஆழத்தில் நட வேண்டும். தேர்வு செய்யும் ரகம் மற்றும் இடைவெளிக்கு ஏற்ப எக்டேருக்கு 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான பக்கத்தூர்கள் தேவைப்படும். மண் ஈரம் காயாமல் நீர் பாய்ச்சுவது ஏற்றதாகும்.
உர நிர்வாகம் மற்றும் நீர் பாசனம் செய்யும் முறை
வளமான மண்ணிற்கு இரசாயன உரம் தேவையில்லை. ஆனால் பயிர் வளர்ச்சிக்கும் அதிக விளைச்சலுக்கும் வளம் குறைந்த மண்ணில் தொழு உரம் 10 டன்களும், 25 முதல் 50 கிலோ வரை தழை மற்றும் மணிச்சத்து அவசியம். வறண்ட பகுதிகளில் மழை இல்லாத பருவத்தில் ஆண்டுக்கு 8-10 முறை நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன் நீர் பாய்ச்சக் கூடாது.
சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி தெரியுங்களா?
வளர்ந்த பயிரில் களை வளராது. பயிரின் வளர்ச்சி பருவத்தில் இரண்டு ஆண்டுகள் மூன்று முறை தரைக்கு மேலே 20-30 சென்டிமீட்டர் செடியின் உயரத்தில் உள்ள இலைகளை அறுத்து விட வேண்டும், முதல் அறுப்பு 4- 5து மாத வயதிலும், இரண்டாவது அறுப்பு 2ம் ஆண்டு ஆரம்பத்தில் பூப்பதற்கு முன்னரும், மூன்றாவது அறுப்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன் குளிர்காலத்திலும் செய்ய வேண்டும். பொதுவாக பூச்சி மற்றும் நோயினால் பெரும் சேதாரம் ஏற்படுவதில்லை இருப்பினும் வறண்ட காலங்களில் கரையான் மற்றும் வண்டுகளின் புழுக்கள் வேர்களை தாக்கும். இதற்கு வேப்பம் புண்ணாக்கினை எக்டேருக்கு 5 டன் அளிப்பதனால் இவற்றை கட்டுப்படுத்தலாம்.
அறுவடை எப்போது செய்வது
நடவிலிருந்து 15 முதல் 24 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் 18 மாத வயதில் அறுவடை செய்யப்பட்ட வேர்களில் இருந்து தரமான எண்ணெய் கிடைக்கும். அறுவடை செய்யப்பட்ட வேர்களை அதன் தழைப்பகுதியில் இருந்து 5-10 சென்டிமீட்டர் நீள துண்டுகளாக நறுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு எண்ணெய் வடிக்க எடுத்துச் செல்லலாம். அதிக நாட்கள் வெயிலில் காய வைத்தால் எண்ணெய் அளவு குறையும். காய வைக்கும் போது அதிக கனமில்லாமல் வேர்களை பரப்பி பூஞ்சாண தாக்குதல் வராமல் உணர்த்த வேண்டும். எண்ணெய் விளைச்சல் மண்தன்மை, வேரின் வயது, அறுவடை நேரம் காய வைத்தால் மற்றும் காய்ச்சி வடித்தல் முறையினை பொறுத்து அமையும்.