கட்டுப்பாட்டு அறை இலவச எண்: 1800 425 1100… மீட்புக்குழுக்கள் அமைப்பு: மேயர் சண்.ராமநாதன் அறிவிப்பு
தஞ்சை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 4 மண்டல தலைவர்கள் தலைமையில் மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தஞ்சை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மண்டல தலைவர்கள் தலைமையில் 4 மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் மாநகர மக்கள் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் 1800 425 1100 என்ற இலவச எண்ணில் தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் படி தஞ்சை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக தஞ்சை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 4 மண்டல தலைவர்கள் தலைமையில் மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநகரின் தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை வெளியேற்றும் பம்ப் செட்-6, கழிவுநீர் லாரிகள் 5, ஜேசிபி 1, தனியார் ஜேசிபி வாகனம் 4, ஜெனரேட்டர் 3, பொக்லைன் 2, பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் தனியார் வாகனம் 2 ஆகியவை தயார் நிலையில் உள்ளன. கரந்தை, சீனிவாசபுரம், கல்லுக்குளம், மகர்நோம்புச்சாவடி ஆகிய நகர்நல மையங்களில் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்.1800 425 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மண்டலம் 1ல் குழு தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் குழுவும், மண்டலம் 2க்கு சந்திரசேகர மேத்தா தலைமையில் குழுவும், மண்டலம் 3க்கு ரம்யாசரவணன் தலைமையில் குழுவும், மண்டலம் 4க்கு கலையரசன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் பொறியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் இடம் பெறுவர். எப்போதும் தயார் நிலையில் குழுவினர் செயல்பட்டு கொண்டு இருப்பார்கள். மேலும் குடிநீர் தட்டுப்பாடின்றி சுகாதாரமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்கள் மழையால் பாதித்தால் உடனே அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு தரமான முறையில் வழங்கப்படும். எனவே தஞ்சையில் பருவமழையை எந்த விதத்திலும் எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். மேலும் தாழ்வாக உள்ள மரக்கிளைகள், மின் கம்பியில் உரசுவது போல் உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணிநேரமும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள். எனவே பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதுவரை கட்டுப்பாட்டு அறைக்கு 120 அழைப்புகள் வந்தன. அவற்றில் 110 அழைப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழுதான நிலையில் அபாயகரமாக உள்ள மரங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பருவமழையை நினைத்து அச்சப்பட தேவையில்லை. நாங்களும், மாநகராட்சி நிர்வாகமும் எந்நேரமும் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். இவ்வாறு மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
பேட்டியின்போது துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் கண்ணன் மற்றும் மண்டல குழு தலைவர்கள் மேத்தா, கலையரசன், ரம்யா சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.





















