பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு என்றால் என்ன?
நெல், கடலை போன்ற ஆண்டு பயிர்களை (Annual Crops) திடீர் மழை, வெள்ளம் அல்லது வறட்சியினால் சாகுபடி செய்ய முடியாமல் போகலாம். அப்படி பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் மகசூல் இழக்க நேரிடும்போது அல்லது முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் போது அதை ஈடுகட்ட அரசு உதவியுடன் வழங்கப்படுவது தான் பயிர்க் காப்பீடு தொகை. தனி ஒரு விவசாயியின் இழப்புக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படுவதில்லை. ஒரு பகுதியில் பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் இழப்பு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2023-2024 ம் ஆண்டு (ராஃபி) சம்பா பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர். இதில் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூரின் தெற்கு பகுதி ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனத்தில் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர்.
அதேபோல் தஞ்சாவூர் வடக்கு பகுதி, அம்மாபேட்டை, பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் ப்யூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனத்தில் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர்.
சாகுபடி செய்ய முடியாமல் போனது
இதற்கிடையில் கடந்தாண்டு சம்பா பருவத்தின் போது போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின்படி வருவாய் கிராமங்களில் 75 சதவீதம் சாகுபடி செய்யாமல் இருந்தால், கிராம நிர்வாக அலுவலரிடம் அதற்கான சான்று பெற்று பயிர் காப்பீடு பிரிமியத்தை விவசாயிகள் செலுத்தினர்.
முதல்கட்டமாக ரூ.22.44 கோடி இழப்பீடு தொகை
தொடர்ந்து 45 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ.22.44 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பா சாகுபடியின் போது போதிய தண்ணீர் இல்லாததால் மகசூல் குறைந்ததாக விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
சோதனை அறுவடை செய்து மகசூல கணக்கீடு
அதன்படி காப்பீடு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, புள்ளியில் துறை அதிகாரிகள், வருவாய் கிராமங்களில் சோதனை அறுவடை செய்து மகசூலை கணக்கீடு செய்தனர். இதையடுத்து காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனங்கள் முன் வந்தது. அதன்படி கடந்த மாதம் ப்யூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனம் சார்பில் 101 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.11.49 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இப்கோ டோக்கியோ பயிர் காப்பீடு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 57 கிராமங்களில் உள்ள 4,759 விவசாயிகளுக்கு ரூ.9.18 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ரூ.43.11 கோடி இழப்பீடு தொகை வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பயிர் காப்பீடு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.43.11 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.