(Source: ECI/ABP News/ABP Majha)
தஞ்சையில் 7 தமிழர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு
தஞ்சை ரயிலடியில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான 7 தமிழரின் உயிர் காக்க தீக்குளித்து உயிரிழந்த காஞ்சிபுரம் செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தஞ்சை ரயிலடியில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான 7 தமிழரின் உயிர் காக்க தீக்குளித்து உயிரிழந்த காஞ்சிபுரம் செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்கழ்ச்சிக்கு தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை வகித்து பேசுகையில், மத்திய அரசு, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஏழு தமிழர்களை உடனே விடுதலை செய்து, 7 தமிழர்களுக்கு நிரந்தர பரோல் வழங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாட்டு சிறையில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இரட்டை ஆயுள் தண்டனையை முடித்து, இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு மாறாக சர்வதேச மனித உரிமைகள் நீதி கோட்பாடுகளுக்கு மாறாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இருந்த பொழுது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் செங்கொடி தீக்குளித்து, தனது உயிரை தியாகம் செய்து 7 தமிழர்களை மரண தண்டனையில் இருந்து பாதுகாத்தார். அதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், இயக்கங்கள் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாட்டு மந்திரி சபையில் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தது. பல ஆண்டுகளாக மந்திரி சபை தீர்மானம் போடப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பேரறிவாளனுக்கு பரோல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
கருணாநிதி ஆட்சி காலத்தில் நக்சலைட்டாக இருந்த பெண்ணாடம் கலியபெருமாளை, நிபந்தனையற்ற பரோல் வழங்கி, வெளியில் விடப்பட்டார். அதே போல், 7 தமிழர்களையும், நிபந்தனையற்ற பரோல் வழங்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான 7 தமிழர்களை விடுதலை செய்யும் வரை தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் தொடரும். தமிழ்நாடு அரசு 7 தமிழர்களின் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் 110 விதியின் கீழ் தமிழ்நாட்டில் இலங்கை அகதி முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்ய ரூ. 317 கோடி அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அறிவிப்பை வரவேற்கிறோம். இலங்கை அகதி முகாம்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் வாழுகின்ற இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசின் சலுகைகள் கிடைக்கின்றன வகையில் நிதியை ஒதுக்க வேண்டும், இந்த நிதி போதுமானதாக இல்லை. இலங்கையில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகத் தான் நடத்தப் பட்டு வருகின்றனர். இலங்கையில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்ந்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக காலை தஞ்சை அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் 7 தமிழர்களின் உயிர் காக்க தீக்குளித்து தியாகியான தோழர் செங்கொடியின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அவரது உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டு, 7 பேர் விடுதலை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சேவையா, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகரச் செயலாளர் ராவணன், மக்கள் அதிகாரம் மாநகரச் செயலாளர் தேவா, மாவட்ட நிர்வாகி அருள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோதண்டபாணி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் ,மாவட்ட நிர்வாகி ஜோதிவேல், ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர் ஆர்.பி.முத்துக்குமரன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.