முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை வழங்க கோரி கும்பகோணத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
’’அரசு அறிவித்த ஊக்கத் தொகையை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கி விட்டு, சிலரது பெயர்களை விட்டு விட்டனர் என புகார்’’
கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நாகை, திருவாரூர், அரியலுார், ஜெயங்கொண்டம், கடலுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதில் 500 க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் இருந்து வருகின்றனா். கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவு, 24 மணி நேர தாய்சேய் நலபிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, எலும்பு முறிவு பிரிவு, கண், பல், பால்வினை நோய் பிரிவு, ரத்தவங்கி, தீப்புண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு தனித்தனியாக சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
மாதந்தோறும் 200 சிசேரியன் அறுவை சிகிச்சையும், சுமார் 350 இதர பொது அறுவை சிகிச்சையும், மாதத்திற்கு சுமார் 50 பிரேத பரிசோதனையும் நடைபெற்று வந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதால், 24 மணி நேரம் பொது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு, மருத்துவமனையை சுத்தம் செய்து துாய்மைக்குவதற்காக, கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சுமார் 200 க்கும் மேற்பட்டோர் துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்து, குப்பைகள், கழிவுகள், மருத்துவ கழிவுகள், நோயாளிகள் வார்டுகளில் சுத்தம் செய்வது, சுகாதார வளாகங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து அடிப்படை பணிகளை செய்து வருகின்றனர். இவர்களால் கும்பகோணம் அரசு மருத்துவமனை துாய்மையாக இருந்து வருகின்றது. இந்நிலையில், கொரோனா தொற்று காலங்களில் துப்புரவு தொழிலாளர்கள், தனது உயிரையும் பொருட்படுத்தாது, நோயாளிகளுக்கு பணிவிடை செய்வதும், வார்டுகளில் கிருமி நாசினி உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் பதவி ஏற்று சில நாட்களில், கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி மருத்துவர்களுக்கு 35 ஆயிரமும், செவிலியர்களுக்கு 25 ஆயிரமும், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ. 15 ஆயிரம் என ஊக்கத்தொகையாகவும், இந்த தொகையை மூன்று மாதத்திற்கு வழங்க வேண்டும் என அறிவித்தார். ஆனால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கி விட்டு, சிலரது பெயர்களை விட்டு விட்டனர். இதனால் பெரும்பாலானோருக்கு ஊக்கத்தொகை வழங்க வில்லை. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கடந்த 4 மாதங்களாக கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், விடுபட்டவர்களின் பெயரை சேர்த்து, மூன்று மாத தொகையான ஒருவருக்கு 45 ஆயிரம் வழங்க வேண்டும், பெயர்களை நீக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை முன்பு 145 துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் துப்புரவு பணிகள் நடைபெறாததால், மிகவும் அவல நிலையில் காட்சியளித்ததை அறிந்த, மருத்துவமனை நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம், விடுபட்டவர்கள் பெயர்களை சேர்த்து, மேலதிகாரிகளிடம் கூறி, அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மொழி கொடுத்ததின் பேரில் முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் கும்பகோணத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டன.