தஞ்சாவூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம்
இப்பள்ளியில் பயிலும் ஆசிரியர்களின் மகள்களுக்கு திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கு திருமண பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள், நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ஏறத்தாழ 2023 ஆண்டுகளுக்கு முன்னர் பெத்தலகேமில் மாட்டுத்தொழுவத்தில் ஏசு பிறந்த நிகழ்வை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதம் 25ம் தேதி கொண்டாடி வருகிறார்கள். உலக வரலாறும், ஏசுவின் பிறப்பை அடிப்படையாக கொண்டு தான் கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறப்பதற்கு பின் என கி.பி., கி.மு. என்று பிரசுரிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா வழக்கமான வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மறைமாவட்ட தலைமை பேராலயமாக விளங்கும் தஞ்சை திரு இருதயபேராலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற கூட்டுப்பாடல் திருப்பலியில் பேராலய பங்குத்தந்தை பிரபாகரன், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆண்டு செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வழிபாட்டில் ஏசு பிறந்ததை நினைவு கூரும் வகையில் சூசையப்பர், கன்னிமரியாள் வேடமணிந்த இருவர் குழந்தை ஏசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி பவனியாக எடுத்து வந்து பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் கையில் வழங்கினர். அதனை அவர் பெற்றுக்கொண்டு ஆலய மேடையில் அலங்கரிக்கப்பட்ட குடிலில் அதனை வைக்க ஆலயமணி ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து விவிலியவாசகம், மறையுரை, இறைமன்றாட்டு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
இறைவழிபாட்டின் முடிவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து பங்குமக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதே போல் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதைஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்து. இதில் ஆயிரக்கண்ககான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் நேற்று சமத்துவ கிறிஸ்மஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு வீதியில் அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி செயலர் தனசேகர் வாண்டையார் கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இப்பள்ளியில் பயிலும் ஆசிரியர்களின் மகள்களுக்கு திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கு திருமண பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாமிகண்ணு மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.