9 அடி உயர கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு திடீர் என்று சென்று ஆய்வு செய்தார். பின்னர் முன்னாள் எம்.பி., எல்.கணேசன் உடல் நிலை குறித்து கேட்டறிய நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்றார்.

தஞ்சாவூர்: தஞ்சையில் பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று தஞ்சை வந்திருந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து கல்லணைக்கு வந்த காவிரி டெல்டா பாசத்திற்காக கல்லணையில் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து பின்பு கார் மூலம் கல்லணையிலிருந்து தஞ்சைக்கு சென்றார். தஞ்சைக்கு வரும் வழியில் தமிழ் பல்கலைக்கழகம் அருகே மத்திய மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு திடீர் என்று சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணாவின் தந்தையும், முன்னாள் எம்.பி., எல்.கணேசன் உடல் நிலை குறித்து கேட்டறிய நேரடியாக அவரது இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்தார். இதே போல் முதல்வர் மருந்தகத்தையும் பார்வையிட்டார்.
தஞ்சைக்கு வந்த தமிழக முதல்வர் தஞ்சை மணிமண்டபம் பகுதியில் இருந்து ரோட் ஷோவாக நடந்து சென்றார். ரோட் ஷோ செல்லும் வழியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். தஞ்சை மணிமண்டபம், ரயிலடி, ஆற்று பாலம் வழியாக சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 9 அடி முழு உருவ சிலையை திறந்து வைத்தார். ரோடு ஷோவாக சென்றபோது வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறந்த பின்பு சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ச.முரசொலி, மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




















