தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா... மகிழ்ச்சியான அறிவிப்பு
பட்டாம்பூச்சி எண்ணிக்கையின் பன்முகத்தன்மை கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது. ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பட்டாம் பூச்சிகளின் இனப்பெருக்க காலத்தின் உச்ச பருவமாக எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் பட்டாம் பூச்சி இனங்களை பாதுகாக்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் பட்டாம் பூச்சி பூங்கா உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழக சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான தாவரங்கள், மரங்கள், மூலிகை தாவரங்களாலும் மலர் செடிகள் நிறைந்துள்ளது. இது வண்ணத்துப்பூச்சிகள் செழித்து வளர ஏற்ற இடமாக அமைகிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை மற்றும் அருங்கானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து 2024 -ம் ஆண்டு நடத்திய ஆய்வில், வளாகத்தில் இனப்பெருக்கம் செய்யும் பல்வேறு வண்ணத்துப்பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.தஞ்சாவூர் பகுதியில் பருவமழை தாமதமாகப் பெய்த போதிலும், பட்டாம்பூச்சி எண்ணிக்கையின் பன்முகத்தன்மை கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது. ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பட்டாம் பூச்சிகளின் இனப்பெருக்க காலத்தின் உச்ச பருவமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான பட்டாம் பூச்சி இனங்கள் சுற்றித்திரிகின்றன.

ஆராய்ச்சியாளர் சதீஷ்குமார், மாணவ-மாணவிகள் இந்த வண்ணத்துப்பூச்சி இனங்களை அடையாளம் கண்டு அறிவியல் நுண்ணறிவைப் பெற உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த ஆண்டு வண்ணத்துப் பூச்சிகளின் பன்முகத்தன்மை குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். உலகளவில் பட்டாம்பூச்சி எண்ணிக்கை குறைந்து வருவதால், தமிழ்ப் பல்கலைக்கழகம் அதன் பட்டாம்பூச்சி பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மூலிகை அறிவியல் துறை மற்றும் அருங்கானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து வண்ணத்துப்பூச்சிக்கான பூங்காவை நிறுவுவதற்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு பட்டாம்பூச்சி பூங்காவை நிறுவுவது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையிடம் ஒப்புதல் பெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த முயற்சி பட்டாம்பூச்சிகளுக்கு ஒரு புகலிடத்தை உருவாக்குவதையும், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆராய்ந்து கற்றுக்கொள்ள ஏதுவாக அமையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய கம்பளிப்புழுக்கள் அவற்றின் கூட்டுப்புழுப் பருவத்தை ஒரே வாரத்தில் முடித்து கொண்டு வண்ணத்துப்பூச்சியாக மாறி விடுகின்றன. கம்பளிப்புழு தன்னை சுற்றி ஒரு கூட்டை அமைத்து கொண்ட பிறகு, அது வண்ணத்துப்பூச்சியாக உருமாற தொடங்குகிறது. முட்டைப்பருவத்தில் இருந்து புழுப்பருவத்திற்கு வந்து கூட்டுப் புழு பருவத்தை அடையும் வரை, கம்பளிப் புழு நன்கு உண்கின்றன. இந்த சமயத்தில் இதன் முக்கிய வேலை தோலை உரிப்பது ஆகும். புழுப்பருவம் இனத்தை பொறுத்து மாறுபடுகிறது.
சிறிய கம்பளிப்புழுக்கள் அவற்றின் கூட்டுப்பு ழுப்பருவத்தை ஒரே வாரத்தில் முடித்து கொண்டு வண்ணத்துப்பூச்சியாக மாறி விடுகின்றன. ஆனால் சிலவகை பெரிய புழுக்கள் 2 ஆண்டுகள் கூட்டுப்புழுப்பருவத்தில் இருப்பதும் உண்டு. புழுப்பருவத்தின் முடிவில் அது ஒரு கூட்டினை அமைத்து, அதனுள் சென்று விடுகிறது. இவை இலைகளின் அடிப்பகுதி அல்லது மண்ணின் அடிப்பகுதியில் கூட்டினை அமைக்கின்றன. பெரும்பாலும் இந்த கூடுகள் பட்டினால் அமைக்கப்படுகின்றன.
மழை பெய்யும் போது வண்ணத்துப்பூச்சிகள் மலர்களின் காம்புகளில் அல்லது புல்களின் மேல் அமருகின்றன. அவை அவற்றின் இறக்கைகளை பின்புறமாக மடித்துக் கொண்டு தலைகீழாக தொங்குகின்றன.
இறக்கைகள் மடித்த நிலையில் வண்ணத்துப் பூச்சிகளை கண்டுபிடிப்பது கடினமாகும். ஏனெனில் வண்ணத்துப் பூச்சிகளின் அடிப்புறத்தில் உள்ள வண்ணங்கள் மங்கலாக இருக்கும். உலகில் சுமார் 10 ஆயிரம் வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. கூட்டுப்புழுப்பருவத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக உருமாறுகின்றன. வளர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் சில வாரங்கள்தான் உயிர் வாழ்கின்றன. வண்ணத்துப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை பருகுகின்றன.
அதிகமாக கனிந்த பழங்களின் சாற்றை வண்ணத்துப் பூச்சிகள் உணவாக உண்கின்றன. இதில் இருந்து கிடைக்கும் சக்தி அவை பறந்து செல்வதற்கான ஆற்றலை கொடுக்கிறது. அனைவரின் மனதை கவரும் வகையில் பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.





















