தஞ்சை அருகே பஸ் கவிழ்ந்து சிறுவன், மூதாட்டி பலி; 40 பேர் காயம்
கேரளப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து வேளாங்கண்ணிக்கு வழிபாடு நடத்த சென்ற போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர்: கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற சுற்றுலா ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் சிறுவன், மூதாட்டி இருவர் பலியான சம்பவம் தஞ்சை பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும், 40 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுமார் 49 பயணிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டு, ஆம்னி பஸ் வந்தது. பஸ்சை சமீர் என்பவர் இயக்கியுள்ளார். அவருக்கு உதவியாளர் ஒருவரும் பஸ்சில் பயணம் செய்துள்ளார். மொத்தம் 51 பேருடன் பஸ் இன்று தஞ்சை வந்தது.
தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு அதிகாலை சுமார் 5:15 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒக்கநாடு கீழையூர் பகுதியில் உள்ள உள்ள சாலை வளைவில் திரும்பிய போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். அதிகாலை நேரத்தில் இந்த அலறல் சத்தத்தால் ஒக்கநாடு கீழையூர் பகுதி பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது.
தொடர்ந்து சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் பஸ் கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடன் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். மேலும், 108 ஆம்புன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இந்த விபத்தில் திருச்சூர் அருகே நெல்லிக்குன்னம் பகுதியை சேர்ந்த லில்லி(63), ஜெரால்டு (9) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். இருவரும் பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. கேரளப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து வேளாங்கண்ணிக்கு வழிபாடு நடத்த சென்ற போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதில் பஸ்சில் இருந்த 40 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐந்து 108 ஆம்புன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இறந்த லில்லி மற்றும் சிறுவன் ஜெரால்டு உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் பஸ் டிரைவரின் உதவியாளர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்திருந்ததால் அவர்கள் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேரக்கப்பட்டனர். மற்றவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கும், மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்த அறிந்த தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு டி.எஸ்.பி., பிரசன்னா, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இந்த சாலை விபத்தால், மன்னார்குடி சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.