20 நாட்களில் பொங்கலோ...! பொங்கல்...! - பொங்கல் பாத்திர விற்பனை மும்முரம்
தஞ்சை மாவட்டத்தில் சுமார் 200 பித்தளை பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. கடந்தாண்டில் 10 கோடி அளவுக்கு விற்பனை நடந்த நிலையில் இந்தாண்டு 5 கோடி வரை விற்பனையாகுமா என்பது கேள்விக்குறி
தமிழர் திருநாளான பொங்கல் விழா வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னதாக சூரியனை வணங்கும் விதமாக வீட்டில் முன்புறம் களிமண்ணால் அடுப்பு செய்து காயவைப்பார்கள். தொடர்ந்து கரும்பு, வாழைப்பழம், இஞ்சி, மஞ்சள் செடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி வைத்து பொங்கல் அன்று வழிபடுவார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற விழாவில் பொங்கல் வைப்பதற்காக கடந்த பித்தளை பாத்திரமான பானை வைத்து பொங்கலிட்டு படைப்பார்கள். மேலும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டிலிருந்து, பித்தளை பொங்கல் பானையை சீர் வரிசையாக வழங்குவார்கள். அப்பித்தளை பாத்திரமான பானையில், புதுமணத்தம்பதிகள், பச்சரியில் பொங்கலிடுவார்கள். அப்போது குடும்பத்திலுள்ள அனைவரும் தண்டோரோ போட்டு, பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு, பானை இறக்கி வைத்து, சூரிய பகவானை வணங்கி, குடும்பத்துடன் சாப்பிடுவார்கள்.
பொங்கல்பண்டிகைக்கு அத்தியாவசியமான பித்தளை பொங்கல் பானை கும்பகோணம் மற்றும் சுற்று பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. மகாராஷ்ட்ரா மாநிலம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தயாரிப்பக்கப்படும் பித்தளை தகடுகளை கொள்முதல், அதனை கும்பகோணத்தில் பாத்திரங்களாக வடிவமைத்து, விற்பனை செய்கின்றார்கள். பித்தளை பாத்திரத்திற்கு என்று பெயர் பெற்ற கும்பகோணத்திலிருந்து வெளி மாநிலம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பித்தளை பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பித்தளை பாத்திரமான பானை கிலோ 600 க்கு விற்பனை செய்து வந்தனர். தற்போது கிலோ 900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு போதுமான விற்பனை இல்லாமல் போனது, தற்போது அனைத்து மக்களும் மிகவும் பொருளாதாரத்தில் சிரமப்படுவதால், இந்தாண்டு விற்பனை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பித்தளை விற்பனையாளர் ராமலிங்கம் கூறுகையில், பித்தளை பாத்திரங்களில் சமையல் செய்யும் போது அது நுண்ணிய அளவில் நம் உடலில் சேர்வதால் நன்மைகள் பல. இதில் சமைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பித்தளையில் இருக்கும் தாமிரம் உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் தருகிற.
பித்தளை பாத்திரத்தில் வெந்நீர் வைத்து குடித்தால் சரும நோய்களை எதிர்க்கும் சக்தி கிடைக்கும். கும்பகோணம், தாராசுரம், எலுமிச்சங்கா பாளையம், சுவாமிமலை, வலையப்பேட்டை, மாங்குடி, பட்டீஸ்வரம் போன்ற இடங்களில் 80க்கும் மேற்பட்ட சிறு தொழிற்கூடங்களில் பாத்திர உற்பத்தி நடக்கிறது. இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 2500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். பித்தளை, எவர்சில்வர் போன்றவற்றில் தயாரிக்கப்படும் பாத்திரங்கள் உள்நாட்டில் பல மாநிலங்கள், மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பித்தளை பாத்திரத்தில் ஈயத்தை பூசி தான் பயன்படுத்த வேண்டும். இதில் சமைப்பது உடலுக்கு நல்லது. பல்வேறு சத்துக்களும், கேன்சர்,ரத்தசோகை, சர்க்கரை, ரத்தகொதிப்பு போன்ற நோய்கள் வராமலும் காத்திடும். ஏழைகள் தங்கம், வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்த வசதியிருக்காது, ஆனால் பித்தளை பொருட்களை பயன்படுத்துவார்கள். அதனால் தான் பித்தளை ஏழைகளின் தங்கம் என்றழைக்கப்படுகிறது. பித்தளை தகட்டின் விலை சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளதால் பாத்திரங்களின் விலையும் உயர்ந்து விட்டது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து பொது மக்கள் மீளாததால், இந்தாண்டு சுமார் 50 சதவீதம் விற்பனை பாதிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் சுமார் 200 பித்தளை பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதில் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனையானது. இந்தாண்டு ரூ. 5 கோடி விற்பனையாகுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது என்றார்.