ஆற்றில் விழுந்த சிறுவன்... தேடுதல் பணியை விரைவுப்படுத்த கோரி பொதுமக்கள் மறியல்
இன்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி காவிரியாற்றில் தடுப்பணை பகுதியில் தவறி விழுந்து காணாமல் போன சிறுவனை மீட்க கூடுதல் தீயணைப்பு வீரர்களை கொண்டு தேடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இன்று கடுவெளி மெயின்ரோட்டில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி பனையடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் கிரிநாத் (14), விக்னேஷ் (10). சிறுவர்கள் இருவரும் நேற்று தங்களின் தாத்தா பாலகிருஷ்ணனுடன் கடுவெளி காவிரியாறு தடுப்பணையில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது தடுமாறி மூன்று பேரும் ஆற்றில் விழுந்து மூழ்கினர்.

இதில் ஆற்றில் மூழ்கிய சிறுவன் விக்னேஷ் மீட்கப்பட்டார். தாத்தா பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விக்னேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தண்ணீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் கிரிநாத்தை மீட்க தீயணைப்புத் துறையினர் 7 பேர் ஆற்றில் இறங்கி தேடி வந்தனர். நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. வெளிச்சம் போதாததால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூரை சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் ஆழம் மிகுந்த பகுதிகளில் சிறுவனை தேடும் பணி மேற்கொண்டனர்.
இதற்கிடையில் காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் தண்ணீர் வருவதை நிறுத்தி கூடுதல் தீயணைப்பு துறையினரை ஈடுபடுத்தி காணாமல் போன கிரிநாத்தை தேடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடுவெளி மெயின் ரோட்டில் 100 க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருவையாறு டிஎஸ்பி அருள்மொழிஅரசு, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் மருவூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன்பேரில் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் இருவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் திருவையாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




















