ஆட்சி பொறுப்பில் 20 ஆண்டுகள் நிறைவு- மோடிக்கு 1001 அஞ்சல் அட்டைகளில் வாழ்த்துகளை அனுப்பிய பாஜகவினர்
’’குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள், பிரதமராக 7 ஆண்டுகள் என 20 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் உள்ள மோடிக்கு 1001 அஞ்சல் அட்டைகள் அனுப்பி மயிலாடுதுறை பாஜகவினர் வாழ்த்து’’
2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திரமோடி தொடர்ந்து 13 ஆண்டுகள் அம்மாநில முதல்வராகவும், 2014ஆம் ஆண்டு முதல் பிரதமராகவும் தனது ஆட்சி பொறுப்பில் 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் பதவி விலகியதையடுத்து, நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மோடி முதன்முறையாக குஜராத் முதல்வராக தனது தலைமைப் பொறுப்பை ஏற்றார். பதவியேற்ற ஆண்டே, குஜராத் பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவுகளிலிருந்து மாநிலத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மிகத்தீவிரமாக இறங்கினார்.
ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் மோடிக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்தச் சூழலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டாவது முறையாக முதல்வரானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நடந்த 2007, 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து நான்கு முறை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். மேலும், குஜராத் மாநிலத்தின் மிக நீண்டகால முதல்வர் என்ற அந்தஸ்தையும் பெற்றார் மோடி.
மோடி குஜராத் மாநிலத்தில் கொண்டுவந்த திட்டங்கள், ஏற்படுத்திய புதுவிதமான மாற்றங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து மோடியின் குஜராத் மாடல் என்ற பிரசாரத்தை தேசிய அளவில் முன்வைத்தது 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தது. ஒரு சில மாநிலங்கள் தவிர நாடெங்கும் இந்த பிரசாரம் கைகொடுக்க பத்தாண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. மோடி தலைமையில் தேர்தலை சந்தித்த பாஜக கூட்டணி 336 மக்களவை இடங்களில் அமோக வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. முதன்முறையாக இந்தியாவின் பிரதமரானார் மோடி. அதேபோல், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், மோடியை தலைமையேற்று தேர்தலை சந்தித்த பாஜக, 303 மக்களவை இடங்களில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. தற்போது மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 20 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்து வருவதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் அவருக்கு 1001 வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர பாஜக தலைவர் மோடி.கண்ணன் தலைமை வகித்தார். இதில், பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு 1001 அஞ்சல் அட்டைகளில் வாழ்த்து அனுப்பினர். இதில் பாஜக மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.