(Source: ECI/ABP News/ABP Majha)
கும்பகோணத்தில் ரத யாத்திரை நடத்த திட்டம்... போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கும்பகோணம் ராமசாமி கோவிலில் நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி தென்னக அயோத்தி என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் வாசலிலிருந்து கும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரை நேற்று மாலை ரத யாத்திரை நடத்த உள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி அறிவித்திருந்தார்.
இதையடுத்து கும்பகோணம் ராமசாமி கோவில் முன்பு கும்பகோணம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்ட் கீர்த்திவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகலட்சுமி, ராஜா, உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி தலைமையில் வந்த இந்து மக்கள் கட்சியினர் தங்களுக்கு ரத யாத்திரை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என போலீசாரிடம் முறையிட்டனர். ரத யாத்திரை நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதனால் கோவிலில் உள்ள ராமசாமிக்கு வழிபாடு செய்து கொள்ளலாம் என போலீசார் அறிவுறுத்தினார்.
இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் தாங்கள் எடுத்து வந்த பூஜை பொருட்களுடன் சாமி கோவிலுக்கு சென்று ராமரை வழிபட்டனர். இதனால் கும்பகோணம் ராமசாமி கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.