ஆத்திச்சூடியில் அத்துப்படி...! - 3 வயதில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தஞ்சாவூர் சிறுவன்...!
நான்கு முறை உலக சாதனை படைத்தமைக்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது
ஒரத்தநாட்டை அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மபாலா-முத்துலட்சுமி தம்பதியின் 3 வயது நிரம்பிய இரண்டாவது மகன் ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகர்களின் பெயர்களையும் வெறும் 48 வினாடிகளில் கூறியதோடு, 6 பல்வேறு தலைப்புகளில் தன் நினைவாற்றலை வெளிப்படுத்தி, உலக சாதனை பதிவு நிறுவனமான ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் சாதனையாளராக இடம் பெற்றார். அதனை தொடர்ந்து 53 உலக நாடுகளின் தலைநகரங்கள் பெயர்களைக் கூறியதோடு, 14 பல்வேறு தலைப்புகளில் தன் நினைவாற்றலை வெளிப்படுத்தி இந்தியா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பெற்று, தொடர்ந்து அடுத்த 3 மாதத்தில், 54 திருக்குறள்களைக் கூறி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். மீண்டும் 4 மாத இடைவெளியில், ஔவையாரின் ஆத்திசூடி கூறி, 7 வயது சிறுவனின் கடந்த கால சாதனையை 3 வயது 9 மாதத்தில் முறியடித்து மீண்டும் கலாம் உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ஆதவனுக்கு தற்போது, 3 வருடம் 9 மாதம். இந்த இளம் வயதில் நான்கு உலக சாதனைகள் புரிந்தமைக்காக, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கடந்த 75 வது சுதந்திர தின விழாவில், ஆதவனுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இதே போல், சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற விழாவில், ஆதவனுக்கு கௌரவ டாக்டர் பட்டச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்து உள்ளது. இது குறித்து தந்தை தர்மபாலா கூறுகையில், ஆதவன், தற்போது ஒரத்தநாட்டிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிப்பில் சேர்ந்துள்ளார். எனது மனைவி முத்துலெட்சுமி, ஆதவன், விளையாடும் போதும், துாங்க வைப்பதற்காக தொட்டிலில் படுக்க வைத்து, ஆட்டி கொண்டிருக்கும் போது, திருக்குறள், உலக நாடுகள் பெயர்கள், இந்தியாவில் மாநில பெயர்கள், தலைநகர பெயர்கள், அத்திசூடி, பழங்கள், பூக்கள், தலைவர்கள் பெயர்கள் உள்ளிட்டவைகளை பற்றி சொல்லி வருவார். அப்போது ஆதவன் கேட்டு கொண்டு, கூர்ந்து கவனித்து வருவான். அதனை மீண்டும் கேட்கும் போது, அப்படியே கூறுவான்.
ஆதவனின் நினைவாற்றலை ஊக்கப்படுத்துவதற்காக, ஆதவனின் பதிவை, இணையவழி மூலம் அனுப்பி வைத்தோம். அதனை உறுதிபடுத்துவதற்காக கலாம் வேல்டு ரெக்ரார்டு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அவனது நினைவாற்றலை பாராட்டி, உலக சாதனை சான்றிதழ், பதக்கங்களை வழங்கினர். நான்கு முறை உலக சாதனை படைத்தமைக்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழிலுள்ள திருக்குரானையும், முகம்மது நபிகளை பற்றி, பயிற்சி எடுத்து வருகிறான். விரைவில் அதனை முழுவதும் கற்றுக்கொண்டு, அதிலும் உலக சாதனை படைக்கவுள்ளான் என்றார்.