சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்- 21ஆம் தேதி முதல் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி 20 கிராம மீனவர்கள் 21 தேதி முதல் தொடர் போராட்டம் ஈடுபட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி, மடவாய்மேடு, உள்ளிட்ட 5 கிராம மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதையறிந்த தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் தங்களின் பைபர் படகை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்று தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக முயன்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் திருமுல்லைவாசல் மற்றும் வானகிரி கிராம மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த படகு மீது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த விசைப்படகால் மோதியுள்ளனர். இதில் பைபர் படகு இரண்டு துண்டுகளாக உடைந்தது சேதமாகி படகில் இருந்த வானகிரி மீனவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுருக்குமடி வலை எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த 20 மீனவர் கிராம மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் வானகிரியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவ கிராமங்கள் மற்றும் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்களுக்கும் அதனை எதிர்க்கும் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் எழுந்துள்ளதால், கடலோர கிராமங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவை 20 கிராம மீனவர்களும் சந்தித்து கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் சுருக்கு வேலையை பயன்படுத்தும் மீனவர்கள் சுருக்கு வழக்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் மீன்பிடி தடை சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் பாரபட்சமின்றி அரசு முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என கூறி தொடர் உண்ணாவிரத போராட்டம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுருக்கு மடி வழக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் மீன்பிடி தடை சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மீனவ கிராமங்களில் மீன்பிடி தடை சட்டத்தை மீறும் மீனவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மீன்பிடி படகுகள் வலைகள் மீன் ஏற்றிச்செல்லும் வாகனம் உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது மீண்டும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலை மாவட்ட நிர்வாகம் விரைவில் சுமூக தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.