தஞ்சையில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட அன்னதான சத்திரம் - கனமழையால் இடிந்து விழுந்தது
’’அன்னதான சத்திரத்தை மீட்டு சீரமைக்க வேண்டும், இது போல் கேட்பாரற்று கிடக்கும் மற்ற சத்திரங்களை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’’
அன்னதான சத்திரத்தின் உள்ளே பழமையான சிவன் கோயில் கேட்பாரற்று கிடக்கின்றது. அங்கு சிவலிங்கங்கள் உள்ளிட்ட சிலைகள் மிகவும் அவல நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தஞ்சாவூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது தொடர் மழை பெய்து வருகின்றது. தஞ்சாவூர் தாலுக்காவில் 173 மிமீ, திருவையாறு தாலுக்காவில் 122 மிமீ, பூதலுார் தாலுக்காவில் 249 மீமி, ஒரத்தநாடு தாலுக்காவில் 82 மிமீ, கும்பகோணம் தாலுக்காவில் 51.40 மிமீ, பாபநாசம் தாலுக்காவில் 150 மிமீ, திருவிடைமருதுார் தாலுக்காவில் 84.40 மிமீ, பட்டுக்கோட்டை தாலுக்காவில் 229.20 மிமீ, பேராவூரணி தாலுக்காவில் 110.40 மிமீ அளவு பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 1251.40 மிமீ அளவு பதிவாகி, மாவட்டத்திலேயே பூதலூர் தாலுக்காவில் அதிக பட்சமழை பெய்து, 80 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தஞ்சாவூரை அடுத்த வெண்ணாற்று கரையில் உள்ள 165 ஆண்டுகள் பழமையான அன்னதான சத்திரம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு கன்று குட்டிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரழந்துள்ளன. இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நீலத்தநல்லூர், கீழத் தெருவை சேர்ந்த குழந்தைசாமி மனைவி சரோஜா (58) மற்றும் இவர்களது மகன் குமார் (40) இருவரும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக இவர்களின் குடிசை வீடு நள்ளிரவு மண் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மகன் இருவரும் பலத்த காயமயைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்கள் கூறுகையில், சரபோஜி மன்னரால் சுமார் 1856 ஆம் ஆண்டு அன்னதான சத்திரம் கட்டப்பட்டுள்ளது. காசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நடைபாதைகளாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக அன்னதான சத்திரம் கட்டப்பட்டது. அதன் பின்னர், கோர்ட்டும், சத்திரம் நிர்வாகமும், பெண்கள் விடுதிகளும் இயங்கி வந்தன. அதன் பின்னர் சுமார் 15 ஆண்டுகளாக எந்தவிதமான பராமரிப்பு செய்யாமல் இருந்து விட்டனர். மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.சத்திரம் நிர்வாகம் பராமரிப்பு செய்யாததால், அந்த சத்திரத்தை சுற்றிலும், அதன் உள்ளேயும் அருகிலுள்ளவர்கள், மாடுகளை கட்டி வைத்து வந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினால் சத்திரத்தின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டமானது. இதில் வேதவள்ளி என்பவருக்கு சொந்தமான இரண்டு கன்று குட்டிகள் இடிபாடுகளில் சிக்கி இறந்து விட்டன. மிகவும் பழமையானதும், பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட அன்னதான சத்திரத்தை, மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததால், மேலும் அதிலுள்ள கட்டிடங்களின் இஸ்திரதன்மை கேள்வி குறியாகியுள்ளது. அன்னதான சத்திரத்தின் உள்ளே பழமையான சிவன் கோயில் கேட்பாரற்று கிடக்கின்றது. அங்கு சிவலிங்கங்கள் உள்ளிட்ட சிலைகள் மிகவும் அவல நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக வெண்ணாற்றங்கரையிலுள்ள அன்னதான சத்திரத்தை மீட்டு சீரமைக்க வேண்டும், இது போல் கேட்பாரற்று கிடக்கும் மற்ற சத்திரங்களை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.