”மாற்றி யோசித்தோம் - இப்போ வருமானம் இரட்டிப்பானது” எப்படி இப்படி சம்பாதிப்பது..?
ஒரு சில விவசாயிகள் மட்டும் பயிரிட்டு வந்த இந்த மரவள்ளி கிழங்கு சாகுபடி தற்போது பரவலாக தஞ்சை மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தின் பல பகுதியில் நெல்லுக்கு பதிலாக மாற்று பயிராக சிப்ஸ்க்கு மட்டும் பயன்படும் வெள்ளை மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சரியான முறையில் பராமரிப்பு இருந்தால் நல்ல லாபம் எட்டலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகமும் நெல் சாகுபடி மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும் உளுந்து, நிலக்கடலை, எள், சம்பங்கி பூ உட்பட மாற்றுப் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டை, புதுப்பட்டி, திருக்கானூர்பட்டி உட்பட பல பகுதியில் தற்போது ஏராளமான விவசாயிகள் சிப்ஸ்க்கு மட்டும் பயன்படும் வெள்ளை மரவள்ளிக்கிழங்கு சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இது நீண்டகால பயிராக இருந்தாலும் லாபமான பயிராக இருப்பதால் விவசாயிகளுக்கு பிடித்த சாகுபடியாக மாறி வருகிறது.
இதுகுறித்து மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். இருந்தாலும் மானாவாரியில் செப்டம்பர் – அக்டோபர் மாதம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலம். இந்த கிழங்கு சாகுபடிக்கு மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்க வேண்டும். களிமண், வண்டல் மண்ணில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய கூடாது. அதேபோல் நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் ஒரு சில விவசாயிகள் மட்டும் பயிரிட்டு வந்த இந்த மரவள்ளி கிழங்கு சாகுபடி தற்போது பரவலாக தஞ்சை மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல லாபகரமான பயிராக வெள்ளை மரவள்ளிக்கிழங்கு சாகுபடி உள்ளது.
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது தொழு உரம் போட்டோம். பின்னர் 4வது முறையாக மீண்டும் ஒரு முறை உழவு ஓட்டினோம். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணோடு நன்கு கலந்துவிட வேண்டும். மாட்டுச்சாணம் மற்றும் நெல் கருக்கையை பயன்படுத்தினோம். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 1900-2500 கிலோ, கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும். ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. இதை குச்சிகள் என்றும் சொல்வாங்க. ஒரு முறை சாகுபடி செய்தோம் என்றால் அந்த குச்சிகளையே மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலைத் தடுக்கலாம்.
மானாவாரி மற்றும் பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்ய வேண்டும். பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3X3 இடைவெளி போதுமானது. நடவு செய்தவுடன் முதல் பாசனமும், அதன் பிறகு மூன்றாவது நாள் உயிர் தண்ணீரும் விடவேண்டும். பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் நீர் பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8 வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்தால் போதுமானது. சொட்டு நீர் பாசனம் செய்தால் தண்ணீர் தேவைக்கு தகுந்தார்போல்தான் செலவாகும். மேலும் நேரடியாக வேருக்கே தண்ணீர் செல்லும். இதனால் நீர் சேமிக்கப்படும்.
மரவள்ளி கிழங்குக்கு உரம் இடும் முறையை பொறுத்தவரை 5ம் மாதம் மற்றும் 7ம் மாதத்தில் உரம் தெளிப்போம். காம்ப்ளக்ஸ், பொட்டாஸ், டிஏபி உரம் தெளிப்போம். செடிகள் நன்கு வளர்ந்து வந்த பிறகு 5ம் மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும். இதனால் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியும் காற்றோட்டமும் கிடைக்கும்
அதேபோல் கிழங்குக்கான குச்சி ஊன்றிய பின்னர் அதாவது நடவு செய்த 20 வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்போது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்ய வேண்டும். பிறகு 3-ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். செடி நட்டு 60-வது நாளில் செடிக்கு இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடவேண்டும். மாற்றி யோசித்தால் மரவள்ளிக்கிழங்கும் மகசூலை அள்ளித்தரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடை நேரத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து இந்த கிழங்குகளை கொள்முதல் செய்து கொள்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

