16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்
கோயில் 11-வது சிவதலமாக விளங்குகின்றது. அம்மன் மங்களாம்பிகை 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கோயில் நகரம் என்று போற்றப்படுகிறது. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் உலக அளவில் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாகும். மகாமக விழாவுடன் தொடர்புடைய 12 சிவன் கோயில்கள், 5 வைணவ கோயில்கள் கும்பகோணத்தில் உள்ளன. இவற்றில் முதன்மையான கோவிலாக 1600 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் 128 அடி உயரம் கொண்டது. கோயிலின் மூலவரான ஆதி கும்பேஸ்வரர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் என்று ஸ்தல வரலாறு கூறுகின்றது.

இந்த சுயம்பு லிங்கத்திற்கு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடக்கிறது. காசி, ராமேஸ்வரம், சிதம்பரம் வரிசையில் இந்த கோயில் 11-வது சிவதலமாக விளங்குகின்றது. அம்மன் மங்களாம்பிகை 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தகோயிலில் அகத்தியருக்கு என்று தனி சன்னதி அமைய பெற்றுள்ளது. சைவ சமயத்தை வளர்த்த 64 நாயன்மார்களுக்கும் கோவிலில் சிலைகள் உள்ளன.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆதிகும்பேஸ்வரர் கோவில் கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்பின்னர் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு பாலாலயம் நடந்தது. தொடர்ந்து கோயிலில் ராஜகோபுரம், உள் பிரகாரங்கள், தரை சீரமைப்பு கொடிமரம் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தது. இதற்காக புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விமான கோபுர கலசம் புதுப்பிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தப்பட்டது. குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று முன்தினம் மங்களம்பிகைக்கு மருந்து சாத்தும் பணி நடந்தது. 101 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடந்தது. குடமுழுக்கு விழா நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி நிகழ்ச்சி புண்யாகவாசனம்(8ம் காலம்), பிம்பசுத்தி, ரஷாபந்தனம், ரிவார பூர்ணாஹூதி, பிரதான யாகசாலை பூர்ணாஹூதியுடன் புனிதநீர் கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்லமாக புறப்பட்டது.
தொடர்ந்து மூலவர் விமானத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பச்சைக்கொடி அசைக்க காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் விமானம், அம்பாள் விமானம் உள்ளிட்டவை மகாகுடமுழுக்கு செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மூலஸ்தான குடமுழுக்கு நடந்தது.
குடமுழுக்கு நடக்கும் போது பக்தர்கள் ஓம் நமச்சிவாயா எனவும், கும்பேஸ்வரா கும்பேஸ்வரா எனவும் பக்தி பரவசத்தில் கோஷங்கள் எழுப்பினர். இன்று மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் கூட்டத்தை முறைப்படுத்தவும் கோவில் மற்றும் வெளிப் பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயிலை சுற்றிலும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
குற்றங்களை தடுக்கவும், கண்காணிப்பதற்காகவும் 40 இடங்களில் கண்காணிப்புகேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில்,1 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில், 2 துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 12 இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டன. பெண்கள் பாதுகாப்பிற்காக சீருடை அல்லாத மகளிர் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவசர மருத்துவ தேவைகளுக்காக கோயிலை சுற்றிலும் 5 ஆம்புலன்ஸ்களும், கோயுல் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னேற்பாடும், வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில் 4 மருத்துவ குழுவினர் வளாகத்தில் பணியில் இருந்தனர்.





















