தஞ்சை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பாராட்டிய நடிகர் நாசர்
ஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு நடிகர் நாசர், திடிரென வந்து ஆணையருடன் புகைப்படம் எடுத்து கொண்டு, பாராட்டு தெரிவித்தார் என்ற தகவல் வெளியானதும், அலுவலகம் முழுவதும் பரபரப்பானது.
தமிழீழ விடுதலைக்காக பாடுபட்ட ஒப்பற்ற போராளியான வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக, இயக்குநர் யோகேந்திரன் இயக்கிய திரைப்படம் மேதகு, அதன் இரண்டாம் பாகமான, மதகு 2, திரைப்படம் சூட்டிங், தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நாசர், மாநகராட்சி அலுவகத்திற்கு திடீரென வந்தார். அங்கு, மாநகராட்சி கமிஷனர் சரவணகுமாரை சந்தித்த நாசர், பழ. நெடுமாறனின் காலத்தை வென்ற காவிய நட்பு புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து, கமிஷனர் சரவணகுமாரின் செயல்பாடுகளை பாராட்டி, உங்களின் பணிகள் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என கூறினார். பிறகு, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலை வணங்கி மரியாதை செலுத்தினர். பின்னர், நடிகர் நாசர், ஆணையர் சரவணகுமாருடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவருக்காக இருவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.அப்போது மாநகராட்சி பணியாளர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இது குறித்து நாசர் உதவியாளர் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் பதவி ஏற்ற நாளிலிருந்து, தஞ்சைக்கும், தஞ்சை மக்களுக்கும் நிரந்தரமான பணிகளை செய்யவேண்டும் என முடிவு எடுத்து, அதற்கான பணிகளை செய்து வருகின்றார். போக்குவரத்து நெரிசல் பகுதியாக இருந்த அண்ணா சிலை அருகிலுள்ள ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம், காணாமல் போன நீர் நிலைகள், வாய்க்கால்களை கண்டு பிடித்து, துார் வாரியது. மேலவீதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து சாக்கடை மீது கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றம், ஆக்கிரமித்திருந்த சுதர்சன சபாவை மீட்டுள்ளது போன்ற பல்வேறு வகையில் தஞ்சைக்காக செய்து வருகின்றார்.
தஞ்சை மக்களும், சமூக ஆர்வலர்களும், இவரது செயலை பாராட்டி வருகின்றனர். உடுமலைபேட்டை, நாகர்கோவில்களில் பல்வேறு நடவடிக்கைகளை நிரந்தரமாக செய்துள்ளார். தஞ்சை மாநகராட்சி ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்க முடியாமல் இருந்த போது, அவர்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வந்தனர். இவர் பதவி ஏற்றவுடன், முதன் முதலாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது. இது குறித்து சமூக வலைதளத்தில், பாராட்டி வைரலானது. இவரது செயல்பாடுகள், மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றியது போன்ற செயல்கள் குறித்து அறிந்ததால், அவரை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும் என்பதற்காக, நேரில் சென்று பாராட்டினார். இது போன்ற நல்ல செயல்களை தொடர்ந்து செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் என்றார். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு நடிகர் நாசர், திடீரென வந்து ஆணையருடன் புகைப்படம் எடுத்து கொண்டு, பாராட்டு தெரிவித்தார் என்ற தகவல் வெளியானதும், அலுவலகம் முழுவதும் பரபரப்பானது.