(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழ்ப் பல்கலை.,யில் வெளியிடப்பட்ட 7 அடி உயர திருக்குறள்: ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ன் சான்றிதழ் பெற்றது
133 பேரையும் ஒன்றாக இணைத்து இந்நூல் தொகுக்கப்பட்டிருப்பது பெரிய சாதனை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 7 அடி உயர திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டது.
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல். திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14 ஆயிரம். தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெறவில்லை.
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42 ஆயிரத்து 194. அனிச்சம், குவளை ஆகிய இரண்டு மலர்கள் மட்டும்தான், திருக்குறளில் இடம் பிடித்துள்ளன. திருக்குறளில் இடம்பெற்ற ஒரே பழம், நெருஞ்சிப் பழம். தமிழ் உயிர்எழுத்துக்களில் ஒன்றான ஒ ள மட்டும், திருக்குறளில் இடம்பெறவில்லை.
திருக்குறள் நூலில் இடம் பெற்ற இரண்டு மரங்கள், பனை மற்றும் மூங்கில். திருக்குறளில், ‘9’ என்ற எண் இடம் பெறவில்லை. அதே சமயம் ‘7’ என்ற எண், எட்டு குறள்களில் இடம்பெற்றுள்ளது. திருவள்ளுவர், திருக்குறளில் பாடியிருக்கும் ஒரே விதை ‘குன்றின்மணி’. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும், திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.
இத்தகைய பெருமை கொண்ட திருக்குறளை 7 அடி உயர புத்தகமாக தமிழ் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்புத்தகத்தை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்ற நிறுவனர் செ. வினோதினி கொரோனா காலத்திலிருந்து 133 எழுத்தாளர்களையும் ஒன்று திரட்டி இந்த நூலை தொகுத்துள்ளார். இதில் 80 பெண்கள், 7 சிறுமிகள், 38 ஆண்கள், 8 சிறுவர்கள் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த 133 பேரையும் ஒன்றாக இணைத்து இந்நூல் தொகுக்கப்பட்டிருப்பது பெரிய சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந. அருள் பேசுகையில், ஒவ்வொரு குறளின் பொருளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கதைகளை உருவாக்கி இந்நூல் படைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. இச்சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு கொண்டு செல்லபட்டது போல, வேர்ல்ட் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்க்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொ) சி. தியாகராஜன், பேசுகையில், மகாராஷ்டிரம், டில்லி, கர்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்கள், தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த 133 எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு திருக்குறளுக்கும் சிறுகதைகள் உருவாக்கி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 10 வயது சிறுவர், சிறுமிகள் முதல் 85 வயது முதியவர்கள் வரை எழுதியுள்ளனர். பதாகை துணியில் அச்சிடப்பட்டுள்ள இந்த நூல் மொத்தம் 80 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு குறளுக்கும் கீழ் அதற்கான சிறுகதை கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்ப் பல்கலைக்கழக வளர் தமிழ்ப் புலத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் வாழ்த்துரையாற்றினார். இச்சாதனையைப் பாராட்டி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் செ. வெங்கடேசன் சான்றிதழ் வழங்கினார். அஸ்வின்ஸ் இனிப்பு நிறுவனர் கே.ஆர்.வி. கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்ற நிறுவனர் செ. வினோதினி வரவேற்றார் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைப் பேராசிரியர் இரா. இந்து நன்றி கூறினார்.