தஞ்சையில் மதுக்கூடத்திற்கு மதுபானம் சப்ளை செய்த டாஸ்மாக் கடை மேலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
தஞ்சை டாஸ்மாக் கடை பாரில் மதுகுடித்த சம்பவத்தில் 2 பேர் இறந்ததையடுத்து பாருக்கு மதுபானம் சப்ளை செய்ததாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் 3 பேர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சை டாஸ்மாக் கடை பாரில் மது குடித்த சம்பவத்தில் 2 பேர் இறந்ததையடுத்து பாருக்கு மதுபானம் சப்ளை செய்ததாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் 3 பேர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட் எதிரே அரசு டாஸ்மாக் கடையும், அதன் அருகே மதுபானக்கூடமும் செயல்பட்டு வந்தது. இந்த மதுபான பாரில் நேற்று மது குடித்த குப்புசாமி, விவேக் ஆகிய 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் 174 என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து மதுக்கூட உரிமையாளரும், காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில் நா. பழனிவேல், மதுக்கூட ஊழியர் காமராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், மதுக்கூடத்துக்கு மதுபானம் எப்படி வந்தது என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்lனர். இதனிடையே இச்சம்பவம் நிகழ்ந்த டாஸ்மாக் மதுக்கடைக்கும், மதுக்கூடத்துக்கும் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோ. பழனிவேல், கலால் வட்டாட்சியர் ஆர். தங்க பிரபாகரன், காவல் நிலைய ஆய்வாளர் வி. சந்திரா உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று இரவு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குப்புசாமி, விவேக்கின் உடற்கூறாய்வுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தன. ஆனால், சடலங்களை வாங்க குப்புசாமி, விவேக்கின் உறவினர்கள் மறுத்துவிட்டனர். இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், இக்கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே சடலங்களை வாங்கிச் செல்வோம் எனவும் உறவினர்கள் கூறிவிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்த இந்த சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மதுபான பாரில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் எந்த கடையில் இருந்து சப்ளை செய்யப்பட்டது என, டாஸ்மாக் கடையில் உள்ள இருப்பை ஆய்வு செய்தனர்.
அப்போது பார் அருகே இருந்த டாஸ்மாக் கடையில் இருந்து தான் பாருக்கு மது சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மதுபானத்தை, மொத்தமாக பாருக்கு சப்ளை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முருகானந்தம், விற்பனையாளர்கள் சத்தியசீலன், திருநாவுக்கரசு, பாலு ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், மதுக்கூடத்தை காலையிலேயே திறந்து விடுகின்றனர். இதனால் எந்தநேரமும் மதுபானம் கிடைக்கிறது. மதுக்கூடத்திற்கு முதல்நாள் இரவிலேயே மதுபான பாட்டில்களை டாஸ்மாக்கில் வேலை செய்பவர்கள் சப்ளை செய்து விடுகின்றனர். கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதில் லாபத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் பங்கு கொடுக்கின்றனர். இதுபோன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.