சாமி தரிசனம் செய்ய வந்த 4 பேர் பலியான சோகம்..இருவரை தேடும் பணி தீவிரம்!
தஞ்சை மாவட்டம் பூண்டிமாதா கோவிலுக்கு தூத்துக்குடி பகுதியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட 4 பேர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பூண்டிமாதாகோவிலுக்கு தூத்துக்குடி பகுதியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட 4 பேர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம்ட பூண்டிமாதாகோவில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது, ஆற்றில் மூழ்கிய 6 பேரில், நான்கு பேரின் உடல் மீட்கப்பட்டது. இருவரை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை சேர்ந்த சுமார் 50 பேர் பேருந்து ஒன்றில் சுற்றுலாவாக வந்தனர். நேற்று காலை தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்துக்கு வந்தனர்.
இவர்களில் சிலர் குளித்து விட்டு பேராலயத்துக்கு செல்வதற்காக, பூண்டி - செங்கரையூர் கொள்ளிடம் பாலம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் குளித்துக்கொண்டிருந்தனர். இவர்களில் ஆண்கள் 8 பேர் மட்டும் ஆற்றின் உள்ளே இறங்கி குளிப்பதற்காக சென்றனர்.
அப்போது ஆற்றில் இருந்த நான்கு அடி பள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதையடுத்து ஒருவர் மெதுவாக நீந்திச் சென்று, கரையில் நின்றபடி கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் ஆற்றில் சிக்கிய ஒருவரை உயிருடன் மீட்டனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் மூழ்கிய தூத்துக்குடி, சிலுவைப்பட்டி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ்(38), பிருத்திவிராஜ்(35), தாவித்ராஜ்(30), தொம்மைராஜ் மகன் ஈசாக்(19), சுந்தரராஜ் மகன் பிரவின்ராஜ்(19), செல்வராஜ் மகன் கெர்மஸ்(20) ஆகியோரை தேடினர்.
இதில், சார்லஸ், பிருத்திவிராஜ் ஆகிய இருவரையும் இறந்த நிலையில் மீட்டனர். அதன் பிறகு தொடர்ந்து தேடும் பணி நடந்தது. பின்னர் 5 மணி நேரத்துக்கு பிறகு பிற்பகல் தாவித்ராஜ் என்பவர் உடலை அதே பகுதியில் மீட்கப்பட்டது. இறந்த மூவரும் சகோதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று மாலை பிரவின்ராஜ் என்பவரது உடலும் மீட்கப்பட்டது. இதையடுத்து ஆற்றில் சிக்கி இறந்த நான்கு பேரின் உடலை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நீரில் மூழ்கி மாயமான ஈசாக், கெர்மஸ் ஆகியோரை திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு தீயணைப்பு துறையைச் சேர்ந்த 8 வீரர்கள், இரண்டு படகிலும், உள்ளூர் மீனவர்கள் 10 பேரும் வலை வீசியும் தேடி வருகின்றனர்.
விபத்து நேரிட்ட இடத்துக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பூண்டி மாதா கோயில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ் ஆகியோர் பார்வையிட்டு, விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினர்.உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றின் கரைகளிலேயே, தங்களுடன் வந்தவர்கள் நீரில் மூழ்கி இறந்த போன சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து, அழுதபடியே இருந்தனர். அவர்களுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது. அதிகாரிகள் எத்தனை எச்சரிக்கை விடுத்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.