டெலிகிராமில் லிங்க் வந்தால் ஜாக்கிரதை; ரிஜெக்ட் பண்ணுங்க! ரூ. 24 லட்சம் மோசடி! க்ரைம் போலீஸ் எச்சரிக்கை
ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யும் டாஸ்க் மூலம் அதிகலாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி அரசு மருத்துவக்கல்லூரி கணினி ஆப்ரேட்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி.
தஞ்சாவூர்: ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யும் டாஸ்க் மூலம் அதிகலாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி அரசு மருத்துவக்கல்லூரி கணினி ஆப்ரேட்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆன்லைனில் பகுதி நேர வேலை என விளம்பரம்
தஞ்சை மகர்நோம்புசாவடியை சேர்ந்த 43 வயதான ஒருவர் அரசு மருத்துவக்கல்லூரியில் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது செல்போனில் வாட்ஸ்-அப் செயலியில் தெரியாத எண்ணில் இருந்து வந்திருந்த ஆன்லைனில் பகுதி நேர வேலை மூலம் அதிக லாபம் பெறலாம் என விளம்பரத்தை பார்த்து ஈர்க்கப்பட்டார்.
அதற்கு கீழே விண்ணப்பிப்பதற்கான லிங்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்த போது அது நேரிடையாக மற்றொரு சமூக வலைத்தளமான டெலிகிராம் குரூப்பிற்கு சென்றது. அதில் இருந்த நபர்கள் ஆன்லைன் பொருட்களை ஆர்டர் செய்யும் டாஸ்க் மூலம் அதிக லாபம் பெறலாம் என கணினி ஆப்ரேட்டரை ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளனர்.
டாஸ்க் செய்தால் லாபம்
இதையடுத்து டாஸ்க்கை செய்ய ஒப்புக்கொண்ட அவருக்கு டெலிகிராமில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்தபோது டாஸ்க்குகள் அட்டவணை முறைப்படி கொடுக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த டாஸ்க்கானது, ஆன்லைனில் பிடித்த பொருட்களை ஆர்டர் செய்து அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பும் வகையில் இருந்துள்ளது. முதல் டாஸ்க்கை செய்த அவர் ரூ.100 அனுப்பிய நிலையில் ரூ.160 கிடைத்துள்ளது. 2-வது டாஸ்க்கில் ரூ.500 அனுப்பிய நிலையில் ரூ.1,100 கிடைத்துள்ளது. 3-வது டாஸ்க்கில் ரூ.1,500 அனுப்பிய நிலையில் ரூ.2 ஆயிரத்து 400 கிடைத்துள்ளது. இதனால் இதை உண்மை என்று நம்பிய அவர் அடுத்தடுத்த டாஸ்க்குகளில் பல்வேறு தவணைகளாக ரூ.9 லட்சத்து 94 ஆயிரத்து 270 ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை.
ஆசை வார்த்தை கூறி ரூ. 9 லட்சம் மோசடி
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து தனது டெலிகிராம் குழுவில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர் நீங்கள் முழு டாஸ்க்கையும் செய்து முடித்தால்தான் உங்களுக்கான லாபம் கிடைக்கும் என்று கூறியதோடு மேலும் பணம் கட்டுமாறு கூறி டெலிகிராம் குரூப்பில் இருந்து வெளியேறிவிட்டார்.
அப்போதுதான் தான் மோசடி கும்பலில் சிக்கி பணத்தை இழந்ததை கணினி ஆபரேட்டர் உணர்ந்துள்ளார். உடன் அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
பங்கு சந்தையில் அதிக லாபம் என மோசடி
இதேபோல் பங்குச்சந்தையின் மூலம் லாபம் பெற்று தருவதாக கூறி ஒய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை திருவேங்கடம்நகரை சேர்ந்தவர் 64 வயதான முதியவர். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது செல்போனில் டெலிகிராம் செயலியை பயன்படுத்தினார். அதில் பிரபல நிறுவனத்தில் இருந்து பேசுவதாக மர்மநபர் ஒருவர் கூறியதுடன், பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என தகவல் அனுப்பினார். இதனையடுத்து, மர்மநபரை முதியவர் தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் பங்குச்சந்தையில் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறினர்.
இலவச போனஸ் என சிறிய தொகை வந்தது
இதனை உண்மை என நம்பிய முதியவர், பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வதற்காக தனது வங்கிக்கணக்கு விவரங்களை மர்மநபரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் இலவச போனஸ் என்ற பெயரில் முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 அனுப்பினர். இதனால் மகிழ்ச்சியடைந்த முதியவரிடம், மர்மநபர் தன்னுடைய வங்கிக்கணக்கை கூறி அதில் பணத்தை முதலீடு செய்ய நிபந்தனை விதித்தார்.
பல தவணைகளில் ரூ.14 லட்சம் அனுப்பினார்
இதற்கு சம்மதித்த முதியவர் முதலில் ரூ.10 ஆயிரத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பிய நிலையில், அவருக்கு ரூ.18 ஆயிரத்து 550 கிடைத்துள்ளது. அடுத்ததாக மீண்டும் ரூ.14 ஆயிரத்து 161 அனுப்பிய நிலையில் அவருக்கு லாபமாக ரூ.30 ஆயிரத்து 900 கிடைத்துள்ளது. இதனால் அதிக லாபம் கிடைக்கிறது என்ற ஆசையில் தொடர்ந்து அந்த முதியவர் பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 345 ஆன்லைன் மூலம் மர்மநபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதற்கு பிறகு அந்த முதியவருக்கு லாபத்தொகை கிடைக்கவில்லை
சைபர் கிரைம் போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், டெலிகிராம் மூலம் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் நீண்ட நாட்களாக சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அந்த முதியவர் உணர்ந்தார். இதனையடுத்து அந்த முதியவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.