மயிலாடுதுறை: 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கோரைப்புல் தீயில் எரிந்து சாம்பல்..!
மயிலாடுதுறையில் விளைநிலத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கோரைப்புல் எரிந்து சேதம் ஆகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே உள்ள கங்கணம்புத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் ரஷீத். இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கோரை புற்களை பயிரிட்டிருந்தார். இந்த சூழலில் அவர் கோரை புற்கள் பயிரிட்டுள்ள நிலத்தில் இன்று மாலை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கி உள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதற்கு முன்னதாக அப்பகுதி பொதுமக்கள் தீயினை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் மளமளவென அருகில் வயல் முழுவதும் பரவத் தொடங்கியது.
இந்நிலையில் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தீ வயல் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியதால் தீயணைப்பு வீரர்களுக்கு தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், தீயானது மற்ற நிலத்திற்கு பரவாமல் தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீடீர் தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கோரை புற்கள் எரிந்து நாசமாயின. இந்நிலையில் அருகில் எதும் குடியிருப்புகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக மற்ற இடங்களுக்கு தீ பரவாமலும், பெரும் பொருட்சேதம், உயிர் சேதங்களும் தடுக்கப்பட்டன. மேலும் விளைநிலத்தில் தீ ஏற்பட்டது தொடர்பாக யாரோடும் முன்விரோதம் காரணமாக வயலுக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு எவ்வாறு தீ பற்றியது என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோரைப்புற்கள் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய தாவரம் என்பதால், யாரேனும் புகை பிடித்து அதனை அணைக்காமல் தூக்கி எறிந்து விட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆணைக்காரன் சத்திரம், தைக்கால், ஆச்சாள்புரம், சாமியம், கோபாலசமுத்திரம், சியலாம், பெரம்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் முக்கிய பயிராக கோரை புற்களை பயிரிட்டு, அதன்மூலம் அதிக அளவில் கோரைப்பாய் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வரும் நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் பயிரிடப்பட்டிருந்த பத்து ஏக்கர் கோரை புற்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆன நிகழ்வு இப்பகுதியில் கோரை பற்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மத்தியிலும் அதனை சார்ந்து வேலைவாய்ப்பை பெற்றுவரும் தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நெற்பயிர்களுக்கு பயிர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் உள்ளது போல் கோரை புல் பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களுக்கும் அரசு இன்சூரன்ஸ் திட்டத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.