நடிகர் சூர்யாவை அடித்தால் 1 லட்சம் பரிசு - பாமக மாவட்ட செயலாளர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இருந்த போதிலும் ஜெய்பீம் திரைப்படம் வெளியான வெளியான நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது. பல்வேறு தரப்பினர் ஜெய்பீம் திரைப்படத்தை சிறப்பாக பேசி பாராட்டி வரும் வேலையில் ஒரு தரப்பினர் ஜெய்பீம் படத்திற்கு எதிராக தங்களின் கண்டனத்தை பல்வேறு வகைகளில் பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஜெய்பீம் படம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 14 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சியினர் மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை திரையரங்கு ஒன்றில் ஓடிக்கொண்டிருந்த சூர்யாவின் திரைப்படத்தினை தடுத்து நிறுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி இனி நடிகர் சூர்யா திரைப்படத்தை மயிலாடுதுறையில் திரையிட விடமாட்டோம் என்றும், சூர்யாவை தாக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Bigg Boss 5 Tamil Promo: ப்ரியங்காவாக மாறிய ராஜூ: கண்ணாடி டாஸ்க்... அவிழும் மாஸ்க்!
இந்நிலையில் கொலை மிரட்டல், இரு தரப்பினரிடையே பிரச்சனையை உருவாக்குதல், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுதல், கொரோனோ நோய் தொற்றை பரப்புதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தவறான பரப்புரையை பரப்பி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.