தமிழகத்தில் இரட்டை உருமாறிய கொரோனா? சுகாதாரத்துறை செயலாளர் பதில்
தமிழகத்தில் இரட்டை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் அதிகளவில் கொரோனா பரவல் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ராஜூவ்காந்தி மருத்துவமனையில் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும்போது, தமிழகத்தில் மக்கள் முகக்கவசம் அணியும் பழக்கத்தை மறந்துவிட்டனர். இதுவே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3.960 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு தற்போது உள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் டபூள் மியூட்டன்ட் எனப்படும் இரட்டை உருமாறிய கொரோனா பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் அதிகரித்துள்ள இந்த கொரோனா பரவலுக்கு, வெளிநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணம் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.