தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை
தென் மாவட்டங்களின் சில பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்க்கும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடை வெயில் துவங்கும் முன்பே சுட்டெரிக்க துவங்கிய வெயில், கடந்த சில வாரங்களாக உக்கிரம் அடைந்தது. மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கும் அளவிற்கு வெயிலின் கொடுமை தாண்டவம் ஆடியது. இந்நிலையில் திடீரென மழை எச்சரிக்கை வெளியானது.

குறிப்பாக தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி கடந்த இரு நாட்களாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கொடைக்கானலில் இன்று மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சுற்றுலாப்பயணிகள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழை வடமாவட்டங்களில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வெயிலில் தவித்து வந்த மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





















