யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் அடுத்தடுத்து கஞ்சா உள்ளிட்ட வழக்கிலும் சிக்கியதால் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கமிஷனரின் குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுக்கு சங்கர்:
இதைத்தொடர்ந்து தேனி எஸ்.பியின் பரிந்துரையின்பேரில் மீண்டும் சவுக்கு மீது 2வது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் அவரின் தாய் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது சவுக்கு மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து வெளியே வந்த சவுக்கு சங்கர் “உண்மையை பேச அஞ்சப்போவதில்லை. நான் உண்மையை கூறினேன். அதனால் புழல் சிறையில் இருந்து மதுரை அழைத்துச்சென்று 2வது முறையாக கைது செய்தனர்.
உண்மையை கூறியதன் காரணமாக என் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தாயாரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்தது போல அதே வீரியத்துடன் தொடர்ந்து செயல்படுவேன்.
உடல்நிலை எப்படி இருக்கு?
சில காலங்களுக்கு பிறகு சவுக்கு மீடியா மீண்டும் இயங்கும். கோவை சிறையில் எனது கை உடைக்கப்பட்டது. முறையான மருத்துவ சிகிச்சைகள் இல்லை. மற்ற சிறைகளில் என்னை வழக்கமான கைதி போலவே நடத்தினார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வெளி வந்த பிறகே உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளிவரும்.
திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். மக்களவை தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக தொடர் கருத்துகளை கூறி வந்தார்.
சமீபத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவலை விஜய் தரப்பில் இருந்து யாரும் உறுதி செய்யவில்லை. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட உள்ளதாக அவர் கூறி வருகிறார்.
இதையும் படிக்க: Rohit Sharma: மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா; ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?