Thoothukudi: முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம்.. தூத்துக்குடி இளைஞரிடம் ரூ.87 லட்சம் மோசடி!
பணம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கும் நிலையில் அதனை இரட்டிப்பாக்க பலரும் ஆசைப்பட்டு அனுபவம் இல்லாத நிலையில் முதலீடு உள்ளிட்ட சில விஷயங்களை செய்து தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குச்சந்தை முதலீடு என கூறி ஒருவரிடம் ரூ.85 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கும் நிலையில் அதனை இரட்டிப்பாக்க பலரும் ஆசைப்பட்டு அனுபவம் இல்லாத நிலையில் முதலீடு உள்ளிட்ட சில விஷயங்களை செய்து தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு சம்பவம் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டு ஆசை
அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரம் பேஸ்புக் மூலம் வந்துள்ளது. அதனை கிளிக் செய்த அவரிடம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு முதலீடு குறித்து பேசியுள்ளனர். பின்னர் வாட்ஸ்அப் குழு ஒன்றில் அந்த இளைஞரை இணைத்து டிரேடிங் செயலி லிங்க் ஒன்றை அனுப்பி அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பிய அந்த இளைஞர் கிட்டதட்ட ரூ.85 லட்சம் முதலீடு செய்த மோசடி நடைபெற்றுள்ளது.
அந்த நபர்கள் சொன்னபடி லாபம் எதுவும் கிடைக்காத நிலையில் அந்த இளைஞர் சம்பந்தப்பட்டவர்களை பலமுறை தொடர்பு கொண்டு பதில் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மகாராஷ்ட்ரா மாநிலம் அஹமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திப் சயாஜி ரோகாகலே, சோபன் டட்டு முஞ்சல் ஆகிய இருவரையும் கடந்த நவம்பர் 19ம் தேதி மகாராஷ்ட்ராவில் வைத்து கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை இழக்க வேண்டாம்
மேலும் இதுதொடர்பான முதலீடு லாபம் உள்ளிட்ட போலி இணைய தள விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம். அதுமட்டுமல்லாமல் cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் முதலீடு செய்பவர்களாக இருந்தால் தீர விசாரித்து, துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் எப்படி வேண்டுமானாலும் மோசடி நடக்க வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.






















