கடலூர் to ஆந்திரா... மீன் வளத்தை பெருக்க அதிரடி நடவடிக்கை... இப்படி கூட பண்ணலாமா ?
மீன் வளத்தை பெருக்கும் வண்ணம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பவளப் பாறைகளை கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடலூர்: மீன் வளத்தை பெருக்கும் வண்ணம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பவளப் பாறைகளை கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பவளப் பாறை அனுப்பும் பணி தீவிரம்
பவளப் பாறை என்பது ஒரு கடற்வாழ் உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டால் உருவாகும் ஒரு பாறை ஆகும். பவளப்பாறைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒரு வாழ்விடமாகவும், பல மீன் இனங்களுக்கு ஒரு காப்பகமாகவும் உள்ளது. பவளப்பாறைகள் ஆஸ்திரேலியா, அந்தமான், லட்சத்தீவு போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
மத்திய மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து ஆழ்கடலில் மீன்வளத்தை பெருக்கும் வண்ணம் செயற்கை பவளப்பாறைகளை உற்பத்தி செய்கின்றன. பொதுவாக பவளப்பாறைகள் பல கடல் உயிரினங்களின் வசிப்பிடமாக திகழ்கின்றன. கடலின் சூழல் மண்டலங்களின் முக்கிய உயிர் ஆதாரமாக பவளப்பாறைகள் விளங்குகிறது.
தமிழகத்தில் ராமநாதபுர மாவட்டம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இயற்கையான பவளப்பாறைகள் உள்ளன. பவளம் என்ற உயிரினம் கால்சியம் திரவத்தை சுரந்து அது பாறையாக உருவெடுப்பதே இந்த பவளப் பாறைகள். இவ்வகை பாறைகள் மீன்களுக்கு மட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களான டால்பின், கடல் குதிரை, கடல் பசு, ஆமை உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கு வழி ஏற்படுத்துகின்றன.
ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த பவளப் பாறைகள் எல்லா இடங்களிலும் உருவாகுவதில்லை. இதனால் செயற்கையான முறையில் செய்யப்பட்ட பவளப்பாறைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட கடல் பகுதியில் படகுகளில் எடுத்துச் சென்று வைக்கப்படுகின்றன. இவ்வாறு வைக்கப்படும் செயற்கையான பவளப்பாறைகள் மீது சில நாட்களிலேயே பாசிகள் வளர்ந்து அது சிறிய மீன்களுக்கு உணவாகிறது.
மேலும் பல பெரிய மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் உறைவிடமாகவும், மறைவிடமாகவும் இனப் பெருக்கத்திற்கு சரியான இடமாகவும் அமைகிறது. இதற்கு செயற்கையான பவளப்பாறைகள் கடலூர் துறைமுக பகுதியில் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. பெரிய குழாய் வடிவு, நட்சத்திர வடிவு போன்ற வடிவங்களில் சிமெண்ட் கலவைகள் கொண்டு தயார் செய்யப்படுகிறது.
மத்திய அரசின் மூலம் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு இந்த செயற்கை பவளப்பாறைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு கடலூர் துறைமுகத்தில் இருந்து கோட்டியா எனப்படும் சரக்கு கப்பல் மூலம் பவளப்பாறைகளை ஆந்திராவிற்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த கோட்டியக்களில் முழுமையாக ஏற்றப்பட்ட செயற்கை பவளப்பாறைகளை கொண்டு சென்று ஆந்திர கடல் பகுதிகளில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















