பாப்பிரெட்டிப்பட்டி : டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்.. விழிபிதுங்கி நின்ற மதுப்பிரியர்கள்..
மது கடைகளை அகற்ற கோரி பாப்பிரெட்டிபட்டி பகுதியில் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த அரசு மதுபான கடை, குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதனால் கணவர்கள் மது குடித்துவிட்டு வருவதால், தினமும் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.
இந்த மது கடையால் மோளையானூர் கிராமத்தில் எப்பொழுதும் குடிமகன்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சென்று வருவதில் பெரும் சிரமத்திற்குள்ளகி வருகின்றனர். இதனால் பெண் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை, அச்சுறுத்தலாகவே இருக்கிறது. மேலும் ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் மதுபானக்கடையை அருகிலேயே இருந்து வருவதாகவும் இதனால் தங்கள் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு குடும்பம் நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இந்த மதுபான கடையை மூட வேண்டும். இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் இடமும் அதிகாரிகளிடமும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் அதிகளவில் நடந்து வருகிறது. அதனால் இந்த மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பேச்சுவார்த்தை நடத்திய அரசு அலுவலர்கள், இடமாற்ற செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆதாதிரமடைந்த கிராமத்தில் உள்ள பெண்கள், இன்று 12 மணிக்கு மோளையானூர் அரசு மதுபான கடை முன்பு திரண்டு, கடை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுபான கடை திறக்க முடியாமல் கடை மேற்பார்வையாளர் சங்கர் உள்ளிட்ட ஊழியர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இதனால் கடை எப்போது திறக்கப்படும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த குடிமகன்கள், செய்வதறியாமல் விழி பிதுங்கி ஏமாற்றத்துடன் நின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் பெண்கள் கடையை திறக்க விடமுடியாது என தெரிவித்தனர்.
இதனால் நேற்று கடையைத் திறக்கவில்லை. தொடர்ந்து பெண்கள் கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டத்தில்க ஈடுபட்டுள்ளவர்களிடம் எந்த ஒரு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இந்த மதுபான கடையை மூட வலியுறுத்தி பெண்கள், இரண்டாவது முறையாக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்