160 ஆண்டுகால உயர்நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை... பெண் சோப்தார் நியமனம்!
160 ஆண்டுகால உயர்நீதிமன்ற வரலாற்றில் இதுவரை சோப்தார் பதவியை ஆண்கள் மட்டுமே வகித்து வந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்முறையாக சோப்தார் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் குடியரசு தலைவர், முதலமைச்சர், பிரதமர் பதவிகள் தொடங்கி அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கால்பதித்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது. இதேபோல் நீதித்துறைகளிலும் பெண்கள் பலர் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1862 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமை, பாரம்பரியம் வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு பதவிக்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் ஒன்று “சோப்தார்” பதவி. உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து விசாரணை நடைபெறும் இடத்திற்கு செல்லும் போதும், காருக்கு செல்லும் போது அவர்கள் வருவதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக சோப்தார் எனப்படும் வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்த உதவியாளர்கள் செங்கோல் ஒன்றை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக்கொண்டே செல்வார்கள்.
இவர்கள் நீதிபதிகளுக்கு தேவைப்படும் சட்டப்புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்து தருவது போன்ற அன்றாட பணிகளுக்கும் உதவியாக இருப்பார்கள். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் 40 சோப்தார் மற்றும் 310 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நீதிமன்ற தேர்வுக்குழு மூலமாக எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளுக்கு உதவிகரமாக இருக்க 20 பெண் சோப்தார்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 160 ஆண்டுகால உயர்நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இப்பதவியை ஆண்கள் மட்டுமே வகித்து வந்தனர். இந்நிலையில் சோப்தார் பதவிக்கு முதல் முறையாக திலானி என்ற பெண் சோப்தார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவின் சேம்பரில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்