’மத்தவங்க பயம்தான் நம்ம பலம்!’ - அதிகாரி போல நடித்து ரூ.18 ஆயிரம் அபேஸ் செய்த பெண்!
பயத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்ட அந்தப் பெண், ஒரு சிலிண்டருக்கு ரூ.9 ஆயிரம் விகிதம் பணம் கொடுத்தால் தான் இந்த விவகாரத்தைச் சரிகட்டி விடுவதாகக் கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகள் போல நடித்து பணமோசடியில் ஈடுபடுவது இங்கு புதிதல்ல. ஆனால் சென்னையில் முக்கியப் பகுதியில் நட்ட நடுப்பகலிலேயே அப்படியான மோசடி ஒன்று நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. சென்னை கிண்டி அருகே உள்ள ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா இவர் தனது மகளுடன் தன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம் ஷீலா தனது மகளுடன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அரசு அதிகாரி எனவும் உணவு வழங்கல் துறையிலிருந்து வருவதாகவும் சொல்லி பெண் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். அரசு அதிகாரி எனச் சொன்னதும் ஷீலாவும் தனது வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்த அந்தப் பெண் கேஸ் கசியும் நாற்றம் வருகிறது எனச் சொல்லி நேரடியாக சமையலறைக்குச் சென்றுள்ளார்.
கேஸ் கசிவதைப் பார்ப்பது போல அடுப்பங்கரையை நோட்டம் விட்டவர் அங்கே இரண்டு கேஸ் சப்ளைகள் இருந்ததைப் பார்த்ததும் இரண்டு இணைப்புகள் சட்டவிரோதம் எனக் கூறி ஷீலாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். அது கிரிமினல் குற்றமென்று சொன்னதும் ஷீலாவும் அவரது மகளும் பயந்துபோய் உள்ளனர்.
அவர்கள் பயத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்ட அந்தப் பெண், ஒரு சிலிண்டருக்கு ரூ.9 ஆயிரம் விகிதம் பணம் கொடுத்தால் தான் இந்த விவகாரத்தைச் சரிகட்டி விடுவதாகக் கூறியுள்ளார். முதலில் தயங்கிய ஷீலா பிறகு மனமாறி ஒட்டுமொத்தமாக 18 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண்ணும் பிரச்னையை சரிசெய்துவிடுவதாகக் கூறி வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்த வேகத்தில் சிட்டாகத் தனது டூவிலரில் சென்றுள்ளார்.
பணம் கொடுத்த பிறகு அந்தப் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஷீலா நேரடியாக உணவு வழங்கல் துறைக்கு அழைத்து விசாரித்துள்ளார். அப்படியாரையும் தாங்கள் அனுப்பவில்லை என துறையிலிருந்து சொன்னதும்தான் தான் 18 ரூபாய் பணமோசடி செய்யப்பட்டிருக்கிறோம் என்பது ஷீலாவுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசாரில் ஷீலா புகார் எழுப்பியுள்ளார். தற்போது அந்தப் போலி அரசு அதிகாரியைப் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் யாரும் அரசு அதிகாரி போல வீட்டுக்கு வந்தால் அவர்களிடம் தகுந்த அடையாளத்தைக் காண்பிக்கும்படி கேட்குமாரும் பொதுமக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சதுரங்கவேட்டை படத்தின் பாணியில் மக்களின் அச்சத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பெண் அதிகாரி பண மோசடியில் ஈடுபட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: படுமோசமான ஃபார்ம்... எப்படி தேர்வானார் ரோஹித் சர்மா? ஆராயும் ABP நாடு!