அதிமுகவில் விரைவில் ஒற்றைத் தலைமையா? - பிரதமருடனான சந்திப்பை விளக்கும் மூத்த பத்திரிக்கையாளர்கள்..!
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டுவருவது குறித்து பேசவே பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் ஓபிஎஸும் ஈபிஎஸும் டெல்லி சென்றுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.
நேற்று காலை 10.30 மணிக்கு தனது உறவினர் மற்றும் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் உடன் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றார். ஓபிஎஸ் தனியாக பிரதமரை சந்திக்க செல்வதாக தகவல் பரவிய நிலையில், நேற்றிரவே கோவையில் இருந்து டெல்லி சென்றார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இவருடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கை விடுப்பதற்காகவே பிரதமரை சந்திக்க சென்றுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமரை ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்திப்பது ஏன்? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடம் கேட்டோம்,
ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி தலைவர்களை தமிழ்நாடு தலைவர்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். தமிழகத்தில் இருக்கின்ற தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவிற்கு பாஜகவின் அதிகாரமும், பாஜகவிற்கு அதிமுகவின் கூட்டணியும் தேவை. அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் பாமக கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊழல் வழக்கை போட திமுக திட்டமிட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பாக மத்திய அரசிடம் இருக்கும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கருதுகின்றனர்.
பிரதமர் உடனான சந்திப்பில் சசிகலா தொடர்பாக பேச ஏதுமில்லை, 2021 தேர்தலில் சசிகலா தீவிர அரசியலிலுக்கு வராததற்கு காரணம் மோடிதான். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகுதான் அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ள 100% வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார். சசிகலா விவகாரம் குறித்து பேசுவதற்காகத்தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் சென்றுள்ளனர் என்பது வெறும் வதந்திதான். தேர்தல் ஏதும் இல்லாத நிலையில் இதுவரையில் தன்னை அரசியல் சக்தியாக நிரூபிக்காத சசிகலா குறித்து முடிவெடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கும் என நான் கருதவில்லை. 2021 தேர்தலில் சசிகலா அதிமுகவில் இணையாததற்கும், சசிகலாவிற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான்.
கோலாகல ஸ்ரீநிவாஸ், மூத்த பத்திரிக்கையாளர்
எனக்கு கிடைத்த தகவலின்படி டெல்லியில் இருந்து வந்த அழைப்பின்பெயரில் மட்டுமே ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரதமரை சந்திக்க சென்றுள்ளனர். அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எங்களின் திட்டவட்டமான எதிரி திமுக என்றே பேசி வருகிறார். பாஜகவை எதிர்த்தே திமுக அரசியல் செய்து வரும் நிலையில், பாஜகவும் திமுகவை எதிர்த்தே அரசியல் செய்யும். இருப்பினும் திமுகவிற்கு இணையாக அரசியல் செய்யும் பலம் தற்போது பாஜகவிற்கு இல்லை, அதற்கு பலகாலம் ஆகும். எனவே திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் எனில் அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டியது பாஜகவின் கடமையாக உள்ளது.
அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டுமெனில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பாஜக கருதுகிறது. இன்றைக்கு இருக்கும் நிலையில் அதிமுகவில் பலம்வாய்ந்த நபராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவரின் தலைமைக்கு கீழ் அதிமுகவை கொண்டு வரவும், அதற்கு ஓபிஎஸை சம்மதிக்க வைக்கவுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இந்த சந்திப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
உச்சநீதிமன்றத்தாலேயே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளின் ஊழல் குறித்து பாஜகவால் பேச முடியாது என்பதால் சசிகலா அதிமுகவிற்குள் வர வாய்ப்பே இல்லை, இந்த சந்திப்பில் அது குறித்த பேச்சே இருக்காது.
ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிக்கையாளர்
டெல்லியில் இருந்து வந்த அழைப்பின்பேரில்தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் டெல்லி சென்றுள்ளனர். அதிமுகவின் ரிமோர்ட் கண்ட்ரோல் எங்கிருக்கிறது என்பது நமக்கு மிக தெளிவாக தெரிகிறது. மேகதாது அணை விவகாரம் குறித்து பேசவே டெல்லி செல்கிறோம் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டாலும் இது முழுக்க முழுக்க அரசியல் நிமித்தமான சந்திப்பு. தமிழக நலன் குறித்த சந்திப்பு என அதிமுக கூறினாலும், அது குறித்து பேச வாய்ப்பே இல்லை என கருதுகிறேன்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்தும், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியவே பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸை அழைத்திருக்கிறார். முதலாளிக்கு கம்பெனியில் என்ன நடக்கிறது என்று சொல்வதற்காகவே ஓபிஎஸ், ஈபிஎஸ் டெல்லி சென்றுள்ளனர். சசிகலாவின் அரசியல் வருகையையும், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்தும் இதில் பேசப்படலாம்