Hari Nadar : ‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..? – பரபரப்பு பின்னணி..!
’மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சிக்கி, சிறைக்கு சென்றவரான ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டு, உயிரிழந்த அஜித் குடும்பத்திற்கு உதவியது ஏன்?’ பின்னணி என்ன ?

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளி அஜித் குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அரசுக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே ஹரி நாடார் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த அஜித் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நாடார் சமூக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிற ஹரி நாடார் சிவகங்கை மாவட்டம் வந்து அரசுக்கும் அஜித் குடும்பத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்
மோசடி வழக்கில் கைதான ஹரி நாடாருடன் அமைச்சர்
அதே நேரத்தில் அஜித் குடும்பத்திற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கச் சென்ற அமைச்சர் பெரியகருப்பனுடனும் ஹரி நாடார் இணைந்து நின்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல்வேறு காவல்நிலையங்களில் ஹரி நாடார் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையிலும், அவர் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரை ஏமாற்றிய மோசடி வழக்கில் சிறை சென்றவர் என்பது தெரிந்தும் அமைச்சரும் அதிகாரிகளும் ஏன் அவரை அருகே நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் ஹரி நாடார் ?
நாடார் சமுதாயத்தில் அறியப்படும் முக்கிய நபராக இருக்கும் ‘ராக்கெட்’ ராஜாவின் பனக்காட்டு படையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஹரி நாடார் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர், சத்திரிய சான்றோர் படை என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்த ஹரி நாடார், இந்த முறை அதிமுக அல்லது திமுக கூட்டணியி இடம் பெற கடும் முயற்சி செய்து வருகிறார். இப்போது அஜித்தின் மரணத்தில் தன்னுடைய சமூக பாசத்தை காட்டி வரும் ஹரி நாடார், திமுக அமைச்சர் பெரியகருப்பனை சந்தித்து தனியாக பேசியதாகவும், வரும் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் இறங்க தனக்காக பேசுமாறும் கேட்டதாகவும் தகவல்கள் கச்சை கட்டி பரவி வருகின்றன.
வழக்கில் சிக்கியிருப்பவரை அமைச்சர் ஏன் அருகே வைத்துக்கொள்ள வேண்டும் ?
ஹரி நாடார் குறித்து தமிழகமே அறிந்திருக்கும் நிலையில், மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் அவரை ஏன் அமைச்சர் பெரியகருப்பன் தன்னுடனே வைத்துக்கொண்டு அஜித் குடும்பத்தினருடன் பேச வேண்டும் ? என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.





















