Goondas Act | ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை... குண்டர் சட்டம் எதற்கு? தீர்வுதான் என்ன?
இந்தச் சட்டத்தின் மூலம் ஒருவரை எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் தள்ள முடியும். அவரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். பிணையும் வழங்கப்படாது.
ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அரசியல் செயல்பாடுகளில் முக்கியமானவை. அரசியல் வாழ்க்கையின் ஓர் அங்கம். ஆளும் அரசே பல்வேறு போராட்டங்களை நடத்தித்தான் ஆட்சியைப் பிடிக்கின்றது. ஆனால் அதேபோன்ற போராட்டங்களை நடத்திய செயற்பாட்டாளர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களின்மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
2017-ல் சேலத்தில் கல்லூரி வாசலில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த வளர்மதி என்ற மாணவி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். சென்னை, மெரினா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதேபோக்கு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்மையில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாகவும் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரசியல் ஆதாயத்துக்காக குண்டர் சட்டம்
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் நிலையில், குறிப்பிட்ட சிலர் மீது அரசியல் ஆதாயத்துக்காக குண்டர் சட்டம் பாய்வதாகவும், தவறான நோக்கத்தில் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில் குண்டர் சட்டம் குறித்து விரிவாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
குண்டர் சட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. சுதந்திரத்துக்குப் பிறகும் அதே நடைமுறை தொடர்கிறது. எம்ஜிஆர் காலத்தில் கடுமையாகப்பட்டு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருத்தம் செய்யப்பட்ட இந்தச் சட்டத்தின் முழுப்பெயர், "தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டுக் குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்".
பிணை கிடையாது
இந்தச் சட்டத்தின் மூலம் ஒருவரை எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் தள்ள முடியும். அவரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். பிணையும் வழங்கப்படாது.
தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அது முதலில் ஆலோசனைக் குழுவிடம் செல்லும். இந்தக் குழுவில் நிரந்தரமாக ஓய்வுபெற்ற 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருப்பர். அவர்களுடன் குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராக முடியாது. பதிலாக குற்றம்சாட்டப்பட்டவரின் நண்பரோ, உறவினரோ ஆஜராகலாம். ஆலோசனைக் குழு, விசாரணைக்குப் பிறகு தங்களின் ஆலோசனைகளை அரசுக்குப் பரிந்துரைக்கலாம். கவனியுங்கள்... பரிந்துரைக்கலாம். உத்தரவிட முடியாது.
அதற்கும் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கும் சம்பந்தமில்லை. எனினும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குண்டர் சட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்பதில்லை. ஆனால் அங்கு உடனடி விசாரணை என்பது பெரும்பாலும் இருக்காது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகே விசாரணைக்கு வரும்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் செல்வது அவரின் உரிமை. ஆனால் அவர் ஜாமீனில் செல்ல வாய்ப்புள்ளது என்று காரணத்தாலேயே குண்டர் சட்டம் போடப்படுவதாகக் கூறுகிறார் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் நிறுவனர் தியாகு.
ஜனநாயகத்துக்கு விரோதமானது
அவர் மேலும் கூறும்போது, ''இருப்பதிலேயே நீண்ட பெயர் உள்ள சட்டம் இதுதான். திரையுலகினருக்கு அரசிடம் செல்வாக்கு இருந்தால் வீடியோ காப்புரிமையை மீறுவோர் மீதுகூட குண்டர் வழக்கு பதியப்படும். அரசியல் பகைவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்துமே ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்தச் சட்டம் அடிப்படையில் ஒரு தடுப்புக் காவல் சட்டம். விசாரணைக் கைதிக்கு உள்ள உரிமைகூட இதில் இல்லை. ஒப்புக்குத்தான் விசாரணைக் குழு உள்ளது. விசாரணைக் குழு அரசுக்குப் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். குற்றச்சாட்டை நிரூபிக்காமலேயே வழக்குப் பதிவு செய்யப்படுவதால் விசாரணைக் குழு உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன.
நீதிமன்றமே பலமுறை கண்டித்தும் குண்டர் சட்டம் பயன்பாட்டில்தான் உள்ளது. ஒருவர் குற்றம் செய்தால், நீதிமன்றத்தில் நிரூபித்து நீங்கள் தண்டனை வாங்கிக் கொடுங்கள். அதற்கு பதிலாக குண்டர்கள் என்ற அடைமொழியுடன் ஒரு சட்டத்தின்கீழ் எதற்கு வழக்குப் பதிவு செய்ய வேண்டும்?
தடுப்புக் காவல், குண்டர் சட்டங்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று அரசு அறிவிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளும் இதுகுறித்துக் கோரிக்கை வைக்க வேண்டும். 'நாங்கள் சொல்கிறோம். அந்த நபரை குண்டர் சட்டத்தில் உள்ளே வையுங்கள்' என்று கூட்டணியில் இருப்பவர்களே கேட்கும் நிலைதான் உள்ளது.
'சாட்டை துரைமுருகன் செய்தது தவறே'
அதேநேரத்தில் மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரின் செயல்களை நியாயப்படுத்தவில்லை. அவர்கள் மோசமான அரசியல் நோக்கம் கொண்டவர்கள். கதைகளை இட்டுக் கட்டி, போலிகளைப் பரப்பி, சமூகத்தில் மோதலை உருவாக்கி, அதன் வழியே பாஜகவை உள்ளே கொண்டு வரும் நோக்கம் கொண்டவர்தான் மாரிதாஸ். ஆனால் அதற்காக தேசத் துரோக வழக்கையோ, குண்டர் சட்டத்தையோ பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. கருப்பர் கூட்டம் மீதான குண்டர் வழக்குக்கு நான்தான் வாதிட்டேன். எனினும் காவல்துறை வழக்கை நீக்கவில்லை. வழக்கம்போல நீதிமன்றம் விட்டுவிட்டது.
சமூக வலைதளப் பதிவுகளுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்வது ஜனநாயகத்திற்கே அவமானம். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள். அதற்கு பதில் இவ்வாறு செய்வது எந்தக் காலத்திலும் சரியல்ல. இல்லையெனில் மிசா சட்டத்தின் கொடுமைகள் பற்றி நீங்கள் பேசியதற்கு எந்த அர்த்தமும் இல்லையே?'' என்று கேள்வி எழுப்புகிறார் தியாகு.
ஆள்தூக்கிச் சட்டம்
''குண்டர்கள் சட்டத்தை ஆள்தூக்கிச் சட்டம் என்றும் அழைப்பர். இதில் ஒருவரைக் கைதுசெய்ய, ஏராளமான ஆவணங்கள் காவலர்களாலேயே உருவாக்கப்படுகின்றன. அதில் மனிதத் தவறுகள் ஏற்படுவதால், நீதிமன்றங்களால் குண்டர் வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். குண்டர் சட்டம் போட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகும் காவலர்கள், குற்றவாளிகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு வேண்டுமென்றே பிழையான ஆவணங்களை உருவாக்கி விடுகின்றனர். அதேபோல குற்றவாளிகளும் இவ்வாறு செய்யச்சொல்லி, காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர்'' என்கிறார் காவல்துறைக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர்.
தவறுக்கு சரியான தண்டனை வழங்கலாம். ஆனால் திட்டமிட்டுப் பழிவாங்கக் கூடாது. இதன்மூலம் திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தெரிகிறது என்கிறார் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜன்.
''ஆட்சிக்கு எதிராகப் பேசுவோரை மிரட்டுவதற்கான ஆயுதமாகத்தான் குண்டர் சட்டம் இருக்கிறது. ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் போராட்டம் முந்தைய நாள் தொடங்கிய நிலையில், 10 மணி நேரம் கழித்து அடுத்த நாள் மதியம்தான் துரைமுருகன் வீடியோ வெளியிட்டார். அதுவும் அங்குள்ள பெண் ஊழியர் அவருக்கு ஆடியோ அனுப்பியதை அடுத்தே, வீடியோவில் ஊழியர்கள் இறந்ததாக துரைமுருகன் கூறியிருந்தார். இவருக்கு முன்னதாகவே ஊழியர்கள் இறந்ததாக, ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். ஆனால் அவை கணக்கில் கொள்ளப்படவில்லையே? துரைமுருகன் செய்தது தவறாகவே இருந்தாலும் குண்டர் சட்டம் ஏன்?
திமுகவும் பாஜகவும் வெவ்வேறு அல்ல. உ.பி.யில் யோகி உ.பா. (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தைப் பயன்படுத்துவதைப் போலவே தமிழகத்தில் குண்டர் சட்டம். நாளடைவில் உ.பா. சட்டமும் இங்கு வரலாம்.
'எதிர்க் கட்சி நாங்கள்தான்'
கேரளாவில் பினராயி விஜயனுக்கோ, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கோ பிரதமர் மோடியை வரவேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படாத நிலையில், தமிழகத்துக்கு மட்டும் அந்தக் கட்டாயம் வந்துள்ளது ஏன்? கேட்டால் மத்திய - மாநில உறவில் இணக்கம் என்பார்கள். இதைக் கூட்டணிக் கட்சிகள் உட்பட யாரும் எதிர்க்கவில்லை. பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவும் எதிர்க்க முடியாத நிலையில், நாங்கள்தான் கடுமையாகத் திமுக நிலைப்பாட்டை விமர்சிக்கிறோம்.
திமுகவுக்குக் இருக்கும் ஒரே குடைச்சல் நாங்கள்தான். எதிர்க் கட்சியாகச் செயல்படும் எங்களைத்தான் முடக்குவார்கள். அதன் வெளிப்பாடே இது. தவறுக்கு சரியான தண்டனை வழங்கலாம். ஆனால் திட்டமிட்டுப் பழிவாங்கக் கூடாது'' என்று பாக்கியராஜன் தெரிவித்தார்.
முந்தைய காலத்தில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை, ஆட்சிக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களை ஒடுக்கவே தடா, பொடா, மிசா, அதன் நீட்சியாக குண்டாஸ் உள்ளிட்ட சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பொதுமக்களை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை, பாலியல் குற்றங்களை ஒடுக்கவே இத்தகைய சட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவது ஜனநாயக விரோதச் செயலாகவே இருக்கும்.
சமூக வலைதளங்களின் வீச்சு அதிகமாகியுள்ள காலகட்டத்தில், எதை வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என்பதும் சமூக விரோதச் செயல்தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்து விடக்கூடாது. அதே நேரத்தில் முந்தைய காலத்தில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை, ஆட்சிக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களை ஒடுக்கத்தான் உள்ளிட்ட சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் ஜனநாயக நாட்டில், பொதுமக்களை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை, பாலியல் குற்றவாளிகளை ஒடுக்கவே இத்தகைய சட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இவற்றைப் பயன்படுத்தப்படுவது ஜனநாயக விரோதச் செயலாகவே இருக்கும்.