AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரும் இரட்டை இலை சின்னமும் அதிமுக அவைத் தலைவர் தலையிலான அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது
அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நிலை குன்றி, காலமான நிலையில், அடுத்த அவைத் தலைவர் யார் என்பது குறித்து அதிமுக தலைமை ஆலோசித்து வருகிறது.
புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்-சும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்-சும் இன்று ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதிமுக அவைத் தலைவராக மதுசூதனனை ஜெயலலிதா நியமிக்கும்போது, அப்போதைய போட்டியில் பண்ருட்டி ராமசந்திரன் மற்றும் பொன்னையன் இருந்தனர்.
இப்போது பண்ரூட்டி ராமசந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெயர்கள் அவைத் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன் முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோரின் பெயர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
பொன்னையன், செங்கோட்டையன் இருவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் வெள்ளால கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படாது என கூறப்படுகிறது. செம்மலையை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இவரும் சேலம் மாவட்டத்தில் வருவதால் செம்மலைக்கு அவைத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என விவரமறிந்த அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை ஒபிஎஸ் சார்ந்துள்ள, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதாலும், இவரின் பேச்சால் பல்வேறு சர்ச்சைகளை அதிமுக கடந்த காலங்களில் எதிர்கொண்டது என்பதாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் அவைத் தலைவர் பதவி கிடைக்காது என்றே தெரிகிறது. வன்னியர் சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் அதிமுகவில் இல்லை என்று கூறப்பட்டு வருவதால் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பெயர் இந்த பட்டியலில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும், இதே சமூகத்தை சேர்ந்த கே.பி.முனுசாமி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும், எம்.எல்.ஏ-வாகவும் இருப்பதால் கே.பி.அன்பழகனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இவைமட்டுமின்றி, சட்டமன்ற தேர்தலில் பாஜக-வோடு கூட்டணி வைத்ததால்தான் ஆட்சியை பிடிக்க முடியாமல்போனது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பட்டவர்த்தனமாக பேசிய நிலையிலும், அதிமுகவில் சிறுபான்மையினருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ள சூழலிலும் அதிமுக அவைத் தலைவர் பதவியை சிறுபான்மையினருக்கு அளிக்கவோ அல்லது பட்டியல் சமூகத்தை சேர்ந்தவருக்கு தரவோ அதிமுக தலைமை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி பார்த்தால், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருக்கும் தமிழ் மகன் உசேன், பட்டியலின சமூகத்தை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகிய இருவரில் ஒருவர் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற போட்டி அதிமுகவில் எழுந்தபோதே, எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக தனபாலை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்தெடுக்கலாம் என ஒபிஎஸ் பரிந்துரை செய்திருந்த நிலையில், ஒபிஎஸ் - ஈபிஎஸ் இருவரின் ‘குட் புக்கிலும்’ இடம் பெற்றுள்ள தனபாலுக்கு அதிமுக அவைத் தலைவராக ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டங்களை கூட்டுவதற்கான, அதாவது கட்சியின் மிக முக்கியமான செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை கூட கூட்டும் அதிகாரம் படைத்தவர் அவைத் தலைவர். கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை அவைத் தலைவர்தான் படிப்பார். அதனை ஒருவர் முன்மொழிந்து, மற்றொருவர் வழிமொழிய வேண்டும். பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு கட்சியின் தலைமை போனால், அவைத் தலைவருக்கு அந்த அதிகாரம் வந்துவிடும். அவர் விரும்பினால் கட்சியை வழிநடத்த ஒரு குழுவையோ அல்லது தற்காலிகமாக ஒரு தனிநபரையோ நியமிக்கலாம். இது அதிமுக சட்ட விதிகளில் உள்ளது.
இதில் மிக முக்கியமாக பார்க்க வேண்டியது, ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதிமுக இரண்டாக பிரிந்தபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பின்னர், அணிகள் இணைந்தபோது அண்ணா திமுக என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும் மதுசூதனன் தலைமையிலான அணிக்கே மீண்டும் வழங்கப்பட்டன. எனவே அதிமுகவில் அவைத் தலைவர் பதவி என்பது பொதுச்செயலாளருக்கோ அல்லது இப்போது இருக்கக் கூடிய ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளருக்கு இணையானது. எனவே அவைத் தலைவர் பதவியை பெற அதிமுகவில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.