Crime: அதிமுக பிரமுகர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை: சிக்கிய பலே திருடன்! நடந்தது என்ன?
ஆரணியில் அதிமுக பிரமுகர் வீட்டின் பீரோவை உடைத்து 25 பவுன் நகை திருடிய பலே திருடனை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில் 10 பவுன் நகைகளைபறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் விஏகே நகரில் வசிப்பவர் ஆனந்தன் வயது (50.) இவர் மத்திய மாவட்ட அதிமுக மீனவர் அணி செயலாளராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி தனது வீட்டை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் அன்று இரவு ஆனந்தன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் வீட்டின் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த நெக்லஸ், கம்மல், தோடு, செயின் , வளையல், மோதிரம் உட்பட்ட 25 பவுன் நகைகளை திருடி தப்பித்து சென்றுள்ளார்.
மறுநாள் அதிகாலை வீடு திரும்பிய ஆனந்தன் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதறியபடி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவின் கதவு உடைக்குப்பட்டு பீரோவில் இருந்த களைத்து போடப்பட்டு இருந்தது.
அதிமுக பிரமுகர் வீட்டில் நகை கொள்ளை
மேலும் பீரோவில் வைத்திருந்த நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஆனந்தன் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, துணை ஆய்வாளர் சுந்தரேசன், குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட காவல்துறையினர் சேகரித்தனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பழைய குற்றவாளிகள் பெயர் பட்டியலோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். அதில் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தைச் சேர்ந்த ராமஜெயம் வயது (36) என்பவரின் கைரேகைகளுடன் அந்த தடயங்கள் பொருந்தியது.
பாலே திருடன் கைது
ஆனால் இதை அடுத்து ராமஜெயம் எங்கு உள்ளார் என காவல்துறையினர் விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரம் பகுதியில் நடந்த திருட்டு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று ராமஜெயத்தை ஆரணி நகர காவல் துறையினர் தங்கள் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆரணி நகர விஏகே நகரில் வசிக்கும் ஆனந்தன் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பெயரில் 10 பவுன் நகைகளை காவல்துறையினர் மீட்டனர், மீதமிருந்த 15 பவுன் நகைகளை ராமஜெயம் விற்று ஜாலியாக செலவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ராமஜெயத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.