Edapadi Palanisami : இதனால்தான் 2021-இல் ஆட்சிக்கு வரமுடியல.. எடப்பாடி பழனிசாமி சொன்ன காரணம்
தம்மோடு இருந்துகொண்டே 2021 சட்டமன்றத் தேர்தலில் சூழ்ச்சி செய்து அதிமுகவின் வெற்றியை தடுத்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசியுள்ளார்.
தம்மோடு இருந்துகொண்டே 2021 சட்டமன்றத் தேர்தலில் சூழ்ச்சி செய்து அதிமுகவின் வெற்றியை தடுத்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசியுள்ளார்.
முதல் நிகழ்ச்சி:
விழுப்புரம் மாவட்டம், அதிமுக மரக்காணம் ஒன்றியச் செயலாளர் ரவிவர்மா இல்ல காதணி விழா அனுமந்தை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக தற்காலிகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது, தான் அதிமுக தற்காலிகப் பொதுச்செயலாளராக பதவியேற்றபின் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்று அவர் கூறினார்.
எம்ஜிஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது பல்வேறு துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளானார்கள். பின்னர் வெற்றிபெற்றார். பின்ன ஜெயலலிதாவும் பல்வேறு துன்பங்களை சந்தித்து பின்னர் போராடி வெற்றி பெற்றார்கள். இருவரும் எப்படி போராடி வெற்றிபெற்றார்களோ, அதைப் போலவே என்னிடமிருந்தும் வெற்றி உறுதி வெற்றி நிச்சயம். உண்மை விசுவாசிகளின் ஆசியோடு அதிமுக ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுகவில் எட்டப்பர்கள்:
மேலும், நான் இடைக்காலப் பொதுச்செயலாளராக வருவேன் என்று எதிர்பார்க்கவும் இல்லை. நம்மிடத்திலே சிலர் எட்டப்பர்களாக இருந்தவர்களின் முகத்திரைக் கிழிக்கப்பட்டுள்ளது. நம்முடனேயே இருந்து கொண்டே நம்மை வழுவிழக்கச் செய்துள்ளார்கள். 2021 தேர்தலிலும் நாம் தான் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இப்போது தான் தெரிகிறது . நம்மோடு இருந்து கொண்டே சூழ்ச்சி செய்து வெற்றியைத் தடுத்தவர்கள், இப்போது இந்த கட்சியை பிளக்கப் பார்க்கிறார்கள். தொண்டன் உழைத்து உருவாக்கியக் கட்சி அதிமுக. உழைப்பால் உயர்ந்த கட்சி. எந்த கொம்பனாலும் இந்த கட்சியைப் பிளக்க முடியாது. ஸ்டாலின் அவர்களே எங்களோடு இருக்கும் எட்டப்பர்களை வைத்து உங்களால் கட்சியைப் பிளக்க முடியாது என்று பேசினார். ஜெயலலிதா இறைவனாக வந்து நமக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
யார் அந்த எட்டப்பர்கள்?
முன்னதாக, சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அனைவரும் கடுமையாக விமர்சித்து பேசினர். அவரை எட்டப்பர் என்று விமர்சனம் செய்தனர். அதன் பின்னர் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். எங்களோடு இருக்கும் எட்டப்பர்களை வைத்து கட்சியைப் பிளக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது யாரை என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.