Vinayagar Chathurthi 2024 : ’பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா’ - விழுப்புரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் விற்பனை
பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் ரூ.5,000 முதல் ரூ.8,000, ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யபடுகிறது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள், வண்ணமயமாக உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராகியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்க்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்வதோடு, பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு பகுதியில் 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஆண்டு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, வண்ணம் பூசி, தற்போது விற்பனைக்கும் வண்ணமயமாக தயார்படுத்தி வைத்துள்ளனர்.
விநாயகர் சிலைகளை தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுபிவைப்பு
இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சின்னத்தம்பி கூறுகையில்: வழக்கம்போல் தை மாதத்தில் விநாயகர் சில தயாரிப்புக்கான பணிகளை தொடங்கி, அதற்கான மூலப்பொருட்களை தயார்படுத்தி வைத்திருப்போம். பிறகு பிப்ரவரி மாதம் முதல் சிலையின் பாகங்களை தயாரித்து, பிறகு இணைப்பு ஏற்படுத்துவோம். இந்தாண்டு முதல் கட்டமாக ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு சிலைகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள் 4 அடி முதல் 15 அடி வரை
திருச்சி, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, சேலம் போன்ற ஊர்களுக்கு கடந்த வாரத்திலிருந்து சிலைகள் தயாரித்து அனுப்பி வருகிறோம். தற்போது, விழுப்புரம், கடலூர் போன்ற உள்ளூர் பகுதிகளுக்கு விற்பனைக்கு வழங்கி வருகிறோம். விநாயகர் சிலைகள் 4 அடி முதல் 15 அடி வரை தயாரித்து கொடுக்கிறோம். இவைகள், பேப்பர் கூழ் பொம்மைகள் தான். பேப்பர் கூழ், மரவள்ளி கிழங்கு மாவு, காகித அட்டை கூழ், கோலம் கட்டி மாவு போன்றவை மூலம் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. பிறகு வாட்டர் பெயிண்ட் அடித்து விற்பனைக்கு செல்கிறது.
புதிய ரக விநாயகர் சிலை
இந்தாண்டும் , எலி, யானை, குதிரை, சிங்கம், மயில், அன்னம், பாம்பு, பசு வாகனங்களில் விநாயகர் சிலைகளும், கை, துதிக்கை போன்றவற்றில் விதவிதமாக புதிய ரக விநாயகர் சிலைகளும் தயாரித்து வழங்கியுள்ளோம். வெளி மாவட்டங்களிலிருந்து பலர் வாங்கி செல்கின்றனர். சிலைகள் ரூ.5,000 முதல் ரூ.8,000, ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை விற்கின்றனர்.
விற்பனை குறைவு தான்!
இந்தாண்டு விற்பனை குறைவாகவே உள்ளது. இங்கு 15 நிறுவனத்தினர் சிலைகள் தயாரிக்கின்றனர். ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 50 சிலைகள் வரை தயாரிப்பதும், அதில் 40 சிலைகள் வரை விற்பனையாகும். ஆனால், இந்தாண்டு 40 சிலைகள் தான் தயாரித்திருந்தாலும், விற்பனையும் 25 சிலைகள் அளவில்தான் ஆகியுள்ளது. கடந்தாண்டு நல்ல விற்பனை இருந்தது. இந்தாண்டு விற்பனை குறைவுதான் என்றனர் சின்னத்தம்பி.