தனித்தீவாக மாறிய விழுப்புரம் ; கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்... வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள்
குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டதால் அங்குள்ள மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். மாவட்டத்தில் 88 மையங்களில் 5,684 பேர் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த அதி கனமழையால் பல்வேறு இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்துவருகின்றனர். வங்கக் கடலில் கடந்த 4 நாட்களாக அமைதியாக இருந்து வந்த ஃபெஞ்சல் புயல் கோரத்தாண்டவத்தைக் காட்டி விட்டது.
அந்த அளவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. நேற்று காலை ஆரம்பித்த மழை தற்போது வரை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. இதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.
இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 50 செமீட்டர் அளவுக்கு எப்போதுமே மழை பெய்தது இல்லை. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை தந்தது ஃபெஞ்சல் புயல். விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
88 நிவாரண மையங்களில் 5,694 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்களில் மூழ்கியதால் 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பதற்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்யத் தொடங்கிய மழை கரையைக் கடந்த பின்னரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
மாவட்டத்தில் விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், மயிலம், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், முகையூர், மணம்பூண்டி, கெடார், காணை, செஞ்சி, மேல்மலையனூர் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளை சூழ்ந்தது. குறிப்பாக விரிவாக்கப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். பல குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டதால் அங்குள்ள மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். மாவட்டத்தில் 88 மையங்களில் 5,684 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, உளளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
கெடாரில் 419 மி.மீ. மழை: மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கெடாரில் 419 மி.மீ. மழை பதிவாகியது. சூரப்பட்டில் 383, விழுப்புரத்தில் 348 மி.மீ., கோலியனூரில் 320, முகையூரில் 302, நேமூரில் 295, கஞ்சனூர், மணம்பூண்டியில் 285 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 3,885 மி.மீ. மழையும், சராசரியாக 185 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.வடியாத வெள்ளநீர்:மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்வது நின்ற நிலையிலும் வெள்ளநீர் வடியவில்லை.
குறிப்பாக விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகள், விரிவாக்கப் பகுதிகள், திண்டிவனம் போன்ற மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள வெள்ளநீர் வடியாத நிலையே காணப்படுகிறது. இந்த இடங்களிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தங்க வைக்கும் பணியை பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் நகரில் பிற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பணியாளர்களைக் கொண்டு மோட்டார் மூலம் வெள்ளநீரை வடிய வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புயலல் விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழப்பு:
புயல் பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கோடி கிராமம், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ராமசாமி மகனான சக்திவேல் (45), ஞாயிற்றுக்கிழமை தும்பூர் ஏரியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும், வளவனூர் காவல் நிலையத்துக்குள்பட்ட தொந்தி ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பா. சிவக்குமார் (50), செல்லாற்றங்கரை ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். விழுப்புரம் அயினாம்பாளையம் பகுதியில் வெள்ளநீரில் மூதாட்டி குப்பம்மாள் (70) அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதைத் தவிர காணை, கஞ்சனூர் என மாவட்டத்தின் பிற பகுதிகளில் சேர்த்து மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.