Villupuram: அதிரடியாக களமிறங்கிய அமலாக்க துறையினர்.. அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடந்த சோதனை முடிவு..!
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லம் மற்றும் கயல் பொன்னி ஏஜென்சியில் நடைபெற்ற அமலாக்க துறையினரின் சோதனை 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு
விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லம் மற்றும் சூரியா பொறியியல் கல்லூரி, கயல் பொன்னி ஏஜென்சியில் நடைபெற்ற அமலாக்க துறையினரின் சோதனை 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது.
தமிழக உயர் கல்விதுறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் வெளிநாடுகளில் முதலீடு செயதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லம் கெளதமசிகாமணி சொந்தமான விக்கிரவாண்டியிலுள்ள சூரியா பொறியியல் கல்லூரி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கயல் பொன்னி ஏஜென்சி ஆகிய மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்க துறையினர் அமைச்சர் பொன்முடி இல்லத்திலுள்ள அறைகளில் சோதனை மேற்கொண்ட பின்பு வீட்டின் வாயிலில் நிறுத்தபட்டிருந்த காரில் சோதனை செய்து இரு அறைகளிலும் வைக்கபட்டிருந்த இரண்டு பீரோக்களிலும் சோதனை செய்தனர். பீரோக்களை திறப்பதற்கான சாவி அமைச்சர் பொன்முடி மனைவியிடம் உள்ளதால் பூட்டினை திறக்கும் தொழிலாளியை அழைத்து வந்து மாற்று போட்டு பிரோக்களை திறந்து அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் சோதனையானது 14 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்து கொண்டு இரவு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் கயல் பொன்னி ஏஜென்சி சூரியா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து சோதனையை முடித்து கொண்டு அமலாக்க துறையினர் புறப்பட்டு சென்றனர். அமலாக்க துறையினர் 17 மணி நேர சோதனை மூன்று இடங்களில் நிறைவு செய்தனர். அமலாக்க துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி இல்லத்தில் இரு பீரோக்களில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் கயல் பொன்னி ஏஜென்சி, சூரியா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். நள்ளிரவோடு அமலாக்க துறையினரின் சோதனைகள் நிறைபெற்றன.
செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான பொன். கெளதமசிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், கவுதமசிகாமணி எம்.பி தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 19ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கு 18ம் தேதி இன்று விசாரணைக்கு வந்தது. சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.