விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு, வேட்டியைக் கிழித்துக் கட்டுப்போட்ட தி.மு.க. எம்.எல்.ஏ..!
விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி கால் முறிந்த நிலையில் சாலையில் கிடந்த இளைஞருக்கு, அத்தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ முதலுதவி அளித்து கட்டுப்போட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விழுப்புரம் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. லட்சுமணன். இவர் அடிப்படையில் எலும்பு சிகிச்சை மருத்துவர் ஆவார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநிலம் முழுவதும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மனுக்களை பெற்று வருகின்றனர்.
இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அந்தந்த தொகுதிக்குட்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று மாவட்ட நிர்வாகத்திடம் அளித்து வருகின்றனர்.
இதையடுத்து, விழுப்புரம் எம்.எல்.ஏ. தனது தொகுதி மக்களிடம் மனுக்களைப் பெறுவதற்காக நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ராகவன்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி காயங்களுடன் சாலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திலேயே காரை நிறுத்தச்சொல்லிவிட்டு கட்சி நிர்வாகிகளுடன் காயம் அடைந்த இளைஞரிடம் லட்சுமணன் சென்றார்.
அவரிடம் விசாரித்தில் அவர் அருகே உள்ள பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு இந்த விபத்தினால் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததையும் எம்.எல்.ஏ. லட்சுமணன் கண்டறிந்தார்.
உடனடியாக சற்றும் தாமதிக்காத எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான லட்சுமணன் இளைஞருக்கு முதலுதவி அளித்தார். மேலும், அருகே இருந்த மரத்தின் கிளைகளில் இருந்த குச்சிகளை உடைத்து அந்த இளைஞருக்கு முறிந்த காலில் கட்டு போட்டார்.
கட்டு போடுவதற்கு முறையான பேண்டேஜ் இல்லாத காரணத்தால் உடனடியாக காரில் இருந்த கரை வேட்டியை தொண்டர்களிடம் எடுத்து வரச்சொன்னார். பின்னர், அந்த கரை வேட்டியை கிழித்து அதை பேண்டேஜாக மாற்றி அதன்மூலம் இளைஞருக்கு கட்டுப்போட்டார். அதற்குள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தது.
இதையடுத்து, ஜெயக்குமாருக்கு ஆறுதல்கூறி அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ. அனுப்பி வைத்தார். பின்னர், எம்.எல்.ஏ. தனது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார். விபத்தில் அடிபட்ட இளைஞருக்கு கரைவேட்டியை கிழித்து கட்டுபோட்ட எம்.எல்.ஏ.வுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த எலும்புசிகிச்சை நிபுணர்களில் லட்சுமணனும் ஒருவர் ஆவார். எம்.எல்.ஏ. லட்சுமணன் முன்பு அ.தி.மு.க.வில் எம்.பி.யாக பதவி வகித்தவர் என்பதும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.