கரூர் : “காணொளி குறைதீர் கூட்டம்” வழியாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் ஆட்சியர்..!
மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற பாணியில் பேசாமல் நெருங்கிய உறவினர் போல அம்மா, அய்யா என்ற வார்த்தைகளை பயன்படுத்தி பொதுமக்களில் ஒருவனாக அவர்கள் குறையை ஒவ்வொன்றாக கேட்டு வருகிறார்.
தமிழகத்தில் முதல் முறையாக கரூரில் பொதுமக்களின் நலன் கருதி திங்கள்கிழமை தோறும் "காணொளி குறைதீர் கூட்டம்" என்ற திட்டத்தின் மூலம் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேட்டறிந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டம் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போட்டுச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும்விதமாக பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
புதிதாக மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்ட பிரபு சங்கர் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இது சம்பந்தமாக விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் இது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி காணொளிக்காட்சி வாயிலாக திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு பணிகள் நிறைவு பெற்றது.
பின்னர் இன்று காலை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் தமிழகத்தில் முதல் முறையாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாக பொதுமக்கள் குறைதீர்க்கும் திட்டத்தை சரியாக 11.00 மணியளவில் கரூர் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கரிடம் நேரடியாக தங்கள் குறைகளை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் உயர் அலுவலர்களும் காணொளி வாயிலாக பங்கேற்றனர். பொதுமக்கள் ஒவ்வொருவராக தனது செல்போன் மூலம் காணொளி குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள், பொதுப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். அவற்றை கேட்டுக் கொண்ட ஆட்சியர் பொதுமக்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
2 நாட்களுக்கு முன்னதாக BharatVC என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எவ்வாறு இதில் கலந்து கொள்ளலாம் என்பது குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று மாவட்டத்தில் முதன் முறையாக காணொலி மூலமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் அறிவுரைப்படி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். நேரடியாக மாவட்ட ஆட்சியர் இடத்தில் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை பொருத்து இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு உரிய தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து காணொலிக் காட்சி வாயிலாக பொதுமக்களிடம் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் குறைகளை ஒவ்வொன்றாக கேட்டு அதனை தனது குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் நேரலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் குடிநீர், சாலை, வசதி, பட்டா மாற்றுதல் மற்றும் கோரிக்கை உள்ளிட்ட பொது மக்களின் புகார்களை அப்போதே துறைரீதியான அதிகாரிகளுக்கும், வட்டாட்சியர் களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து அதற்கான தீர்வை விரைந்து எடுக்கவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பின்னர் நேரலையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரில் பார்த்து காணொலி காட்சி மூலம் தங்களது குறைகூறும் ஏற்பாட்டை முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தங்களது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.