காஞ்சிபுரம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! வேகவதி ஆற்றில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தீவிரம்! வெள்ள அபாயம் நீங்குமா?
"வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேகவதி ஆற்றில் தூர்வாரும் பணி தொடங்கியதால் காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்"

"காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணி தொடங்கியது"
காஞ்சிபுரம் வேதவதி ஆறு
காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் ஓடும் வேகவதி ஆற்றில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 1 கோடி மதிப்பில், 12 கி.மீ. தொலைவுக்கு நடைபெற உள்ள இந்தப் பணி, நீர் வளத் துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிப்பு
வேகவதி ஆற்றில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் தூர்வாரப்படாதது ஆகியவை, மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்குக்கு முக்கிய காரணமாக இருந்தன. குறிப்பாக, ஆகாயத்தாமரை மற்றும் பிற செடி கொடிகள் ஆற்றின் நீரோட்டத்தை பெரிதும் பாதித்தன.
இதனால், ஒவ்வொரு வருடமும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பதிக்குன்றம், கீழ் கேட், ஓரிக்கை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வந்தது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், ஆறு தூர்வாரப்படாததால் தொடர்ந்து பாதிப்புகள் இருந்து வந்தன. எனவே, மழைக்காலத்திற்கு முன்பாக ஆற்றைத் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
வடகிழக்கு பருவம் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வேகவதி ஆற்றின் தூர்வாரும் பணி இன்று தொடங்கப்பட்டது. திருப்பதிக்குன்றம் முதல் கீழ்கேட் வரை சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த பணி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், ஜேசிபி இயந்திரத்தை இயக்கி பணியைத் தொடங்கி வைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
20 நாட்களில் நிறைவடையும் பணி
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஒப்பந்ததாரர்களும் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் பேசுகையில், நான் நல்லா ஜேசிபி ஓட்டுகிறேனா ?. எனக்கு கையில் ஒரு தொழில் இருக்கிறது என விளையாட்டாக பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அடுத்த 20 நாட்களுக்குள் இந்த தூர்வாரும் பணி நிறைவடையும். இதன் மூலம், ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் பிற செடி கொடிகள் அகற்றப்பட்டு, மழைக்காலங்களில் நீர் தடையின்றி வெளியேற வழி ஏற்படுத்தப்படும். இது காஞ்சிபுரம் மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரும் நிவாரணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















