CM Stalin: "அரசுப் பள்ளியில் படித்த வீரமுத்துவேல் ஒரு எடுத்துக்காட்டு" - மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
அரசுப் பள்ளியில் படித்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஒரு எடுத்துக்காட்டு என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
CM Stalin: அரசுப் பள்ளியில் படித்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஒரு எடுத்துக்காட்டு என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் உரைவளம் மறுபதிப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர், இவ்விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தங்க சங்கிலியை அணிவித்தார் தருமபுரம் ஆதீனம். இதனை அடுத்து, தருமையாதீன இணையதள வானொளி, தொலைக்காட்சி ஒலி ஓளி பதிவகத்தினை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, "16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது தருமை ஆதீன மடம் . அன்று முதல் இன்று வரை ஆன்மீக சேவை , சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளது. பவள விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. செப்டம்பர் மாதம் திராவிட மாடல் பவள விழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பு இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தருமை ஆதீனத்திற்கும் எங்களுக்கும் குடும்ப நட்பு உண்டு. தருமபுர ஆதீனத்தால் கட்டப்பட்டது தான் திருக்குவளை ஆலயம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அரசாக தமிழக அரசு உள்ளது. அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என நினைக்கும் கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தருமபுரம் ஆதீனம் போன்ற பல்வேறு ஆதீனங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது போதுமானது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோயில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு, பழமையான கோயில்களை சீரமைத்து குடமுழுக்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திருக்கோயில்கள் பணிகளை மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டள்ளது. தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.1000 ஆண்டுகள் பழமையான 112 கோயில்களை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும், ”சந்திரயான் 3 நேற்று நிலவில் தரையிறங்கியதன் மூலமாக இந்திய நாட்டை உலகமே வியப்போடு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த சாதனைக்கு பின்னால், சந்திரயான் 3 திட்ட இயக்குநராக இருப்பவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேல். அரசு பள்ளியில் படித்து இந்த சாதனை படைத்துள்ளார். இவரை போன்றோர்களை எடுத்துக் காட்டாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது. இது எனது அரசல்ல நமது அரசு” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.