அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ நாளாக கொண்டாட்டம்: முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்ற விசிக..
"திராவிட மாடல் ஆட்சி என்பது ஆதிதிராவிட மக்களையும் உள்ளடக்கியது என்பதை உலகறிய எடுத்துக் கூறியிருக்கிறார்...
அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாள் இனி ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் ஏற்கப்படும். அவரது முழு உருவச்சிலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்படும். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தமிழில் செம்பதிப்பாக வெளியிடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தமிழ்நாடு சட்டப்பே ரவையில் விதி 110ன் கீழ் அறிவித்திருக்கிறார். இதற்காக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாமனிதர் பேராசான் கௌதம புத்தரின் கோட்பாட்டு வழியில், அவரது கொள்கை வாரிசாக இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இம்மண்ணில் சமத்துவத்தை வென்றெடுப்பதற்காக தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். அவர் தனது பேரறிவுப் பேராற்றலின் மூலம் நமக்கு வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி அதனை நிலைநாட்டுவதற்கு உரிய அடித்தளத்தை அமைத்தார். அதுவே, அரசியலமைப்புச்சட்டத்தின் பதினான்காவது உறுப்பாகும்.
"இந்திய அரசானது தனது ஆட்சிப் பரப்புக்குள் சட்டத்தின் முன்னால் சமத்துவத்தையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவத்தையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது" இது தான் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் சமத்துவ உரிமையாகும். இந்தியாவில் வசிக்கும் யாவரும் சட்டத்தின் முன்னால் சமம்; அச்சட்டத்தின்மூலம் அளிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்யாவும் அனைவருக்கும் சமத்துவமான முறையில் அமைய வேண்டும். எந்த அடிப்படையிலும் எவர் ஒருவருக்கும் சமத்துவம் மறுக்கப்படக் கூடாது என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் பதினான்காவது உறுப்பு உறுதிப்படுத்துவதாகும். ஏற்றத்தாழ்வையே அடிப்படையாகக் கொண்ட சனாதனக் கருத்தியலுக்கு எதிராக சமத்துவத்தை இந்த நாட்டின் அடித்தளமாக ஆக்கிய மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை அனைத்துலக சமத்துவ நாளாக 2020 ஆம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடைபிடித்து வருவதோடு அன்றைய தினம் சமத்துவ உறுதிமொழி ஏற்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது.
நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம். ” தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் சமூக நீதி நாள் எனக் கடைப்பிடிக்கப்படுவது போல் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாள் என அரசின் சார்பில் கொண்டாடுவதற்கு அறிவிப்புச் செய்ய வேண்டும்” என்று முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தோம். கனடா நாட்டு அரசு அப்படி அறிவித்து கடைபிடித்து வருவதையும் மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்துக்கு சுட்டிக்காட்டினோம். அதுபோலவே ’அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை ஒன்றை அமைத்திட வேண்டும்’ என்றும் எழுத்துப் பூர்வமாகக் கோரிக்கை வைத்தோம். எமது இந்த வேண்டுகோளையும் ஏற்று இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை நிறுவப்படுமெனவும் அறிவிப்புச் செய்திருக்கிறார்.
இவ்வறிப்புகளின் மூலம் ’திராவிட மாடல் ஆட்சி’ என்பது ஆதிதிராவிட மக்களையும் உள்ளடக்கியது தான் என்பதை உலகறிய எடுத்துக் கூறியிருக்கிறார். அத்துடன் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சர் ஆ. ராசா அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைத் தமிழில் செம்பதிப்பாக வெளியிடவும் ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்த அறிவிப்புகள் இந்தியாவிலுள்ள பிற மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுவனவாக அமைந்திருக்கின்றன. மகத்தான அறிவிப்புகளை வெளியிட்டு புரட்சியாளர் அம்பேத்கரின் புகழுக்குப் பெருமை சேர்த்திருக்கும் முதலமைச்சருக்கு எமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.