சிக்கலை தந்த கட்சி பெயர்.. பின்தொடர்ந்த உளவுத்துறை.. மனம் திறந்து பேசிய திருமா
கட்சி தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளோடு தனக்கு நெருக்கம் இருப்பதாக காவல்துறை, உளவுத்துறை சந்தேகிப்பதாகவும் இதனால் தன்னை உளவுத்துறையினர் பின் தொடர்ந்ததாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், "90களில் தொடக்கத்தில் நான் சந்தித்த நெருக்கடிகளை விவரிக்க முடியாது.
விசிக பெயர் காரணத்தை சொன்ன திருமா:
விடுதலைச் சிறுத்தைகள் என்கிற பெயர் விடுதலைப் புலிகளை நினைவூட்டுகிறது. விடுதலைப்புலிகளோடு உங்களுக்கு நெருக்கம் இருப்பதாக காவல்துறை, உளவுத்துறை சந்தேகிக்கிறது; இதனால் உங்களை உளவுத்துறையினர் பின் தொடர்கிறார்கள். தேவையற்ற பதற்றத்தை உங்களுக்கு தருகிறார்கள் என அறிவுரை கூறினார்கள்.
இந்த பெயர் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஈர்ப்பைத் தரலாம்; பெண்களுக்கு,பொதுமக்களுக்கு ஈர்ப்பை தராது. பெண்களுக்கு ஈர்ப்பைத் தராது என்றெல்லாம் எனக்கு அறிவுரை சொன்ன காலம் உண்டு. அப்போதும் நாம் நிலப்பரப்பில் இருந்தாலும் ஒரே கருத்தியல் களத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வோடு தான் என் நிலைப்பாட்டை நான் உறுதியாக பற்றிக் கொண்டேன் பின்வாங்கவில்லை.
தேர்தல் அரசியல் அடி எடுத்து வைக்க நேர்ந்தது. தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைத்த பிறகு இதை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்திலே போய் பதிவு செய்ய வேண்டும் என்கிற தேவை எழுந்தது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் பலரும் எனக்கு ஆலோசனை சொன்னார்கள்.
வழுவவில்லை! நழுவவில்லை! விலகவில்லை!
கட்சிக்கு வேறு பெயர் சூட்டுங்கள்; இது வேண்டுமானால் ஒரு இளைஞர் இயக்கமாக இருந்து விட்டுப் போகட்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லுகிற போது எவ்வளவு மியூசிக்கலாக இருக்கிறது என்று ஒருவர் வந்து என்னிடத்திலே சொன்னார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று எழுதிக் கொடுத்தபோது தேர்தல் ஆணைய அதிகாரி என்னிடத்தில் "மிருகங்களின் பெயர்களை நாங்கள் கட்சிக்கு அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்; பெயரை மாற்றி வாருங்கள் என்று சொல்லி திருப்பி கொடுத்துவிட்டார்.
அமர்ந்து பேசினேன். அவர் ஜனநாயக சிந்தனையாளர் கொஞ்சம் யோசித்தார். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் பார்ப்போம் என்றார். பின்னர் அந்தப் பெயரை பதிவு செய்து தந்தார். எதற்கு இதை நான் உங்களிடத்தில் நினைவு படுத்துகிறேன் என்றால் 20களின் தொடக்கத்திலே எனக்கு என்ன உணர்வும், புரிதலும் இருந்ததோ அதுதான் 50களிலும் இருந்தது.
இன்றைக்கு 60 களிலும் இருக்கிறது; அதிலிருந்து நான் வழுவவில்லை, நழுவவில்லை, விலகவில்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அரசியல் போக்கு தமிழ்நாட்டில் மாறிப்போனது. செல்வாக்கு மிக்க கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் இருந்து வந்த சூழலில்; அதிமுக ஈழத்தமிழர் விவகாரத்தில் இருந்து முற்றாக விலகி நின்றது.
1991 முதல் 2009 வரையிலும் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக ஆதரித்தோ, பரிந்தோ ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. பத்தாண்டுகளில் தமிழ்நாடு; தனி நாடு என்கிற நிலைக்குப் போய்விடும் அப்படி ஒரு அரசியல் இங்கே உருவாகி விடக்கூடாது. தடுக்க வேண்டும் என்கிற தேவையும் அன்றைக்கு இந்திய அரசுக்கு இருந்தது.
இன்றைக்கும் அமெரிக்காவுக்கு எதிராக நிற்கிற ஒரு வல்லரசு என்று சொல்லத்தக்க நாடு எதுவும் இல்லை. பொருளாதார வலிமை பெற்ற ஒரு பேரரசாக வல்லரசாக சீனா இருந்தாலும் கூட ராணுவ அடிப்படையிலே அமெரிக்காவை எதிர் கொள்ளக்கூடிய வகையில் எந்த வல்லரசு இன்னும் உருவாகவில்லை" என்றார்.





















