Tamil Thai Vazhuthu: வாடிகன் தேவாலயத்தில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து - வைரல் வீடியோ !
வாடிகனில் உள்ள தேவாலயத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத போதகர் தேவசகாயத்திற்கு இன்று ரோமில் புனிதர் பட்டம் வழங்கப்பட்ட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோர் ரோம் சென்றுள்ளனர். இந்த விழா வாடிகனிலுள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அங்கு இருக்கும் கன்னியாஸ்திரிகள் தமிழ்த் தாய் வாழ்த்தை பாடுகின்றனர். இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு ஐடி அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
The Vatican honours Tamil Nadu with தமிழ்தாய் வாழ்த்து at the canonization cultural program of Devasahayam Pillai! An absolute proud moment for us! @Manothangaraj @GingeeMasthan @isai_ pic.twitter.com/6JKNMqh1n2
— Minister for IT & Digital Services, Tamil Nadu (@TNITMinister) May 14, 2022
யார் இந்த தேவசகாயம்? எதற்காக இவருக்கு புனிதர் பட்டம்?
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவர் 1712ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். தேவசகாயம் பிள்ளை என்ற பெயரில் இவர் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் கிறிஸ்துவ மதத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். இவர் 1749ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது அவருடைய பெயரை லாரன்ஸ் என்று மாற்றினார். அப்போது சமூகத்தில் நிலவிய சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக இவர் குரல் கொடுத்தார்.
அத்துடன் இவர் சாதிய சமுத்துவத்தை போதனை செய்து வந்தார். இதன்காரணமாக இவர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் சிறையில் இவர் பல இன்னல்களை சந்தித்தார். கிறிஸ்துவ மதத்தின் மேல் இருந்த பற்று காரணமாக 1752ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மன்னரின் கட்டளைப்படி இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடைய உடல் கன்னியாகுமாரி மாவட்டம் கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இவருடைய இறப்பிற்கு பின் இவருக்கு இறையூழியர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவருக்கு மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் முக்திப்பேறு பெற்றவர் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான ஆவணங்கள் சேகரித்து வாடிகனுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வாடிகனில் இருந்து இவருக்கு புனிதர் பட்டம் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் வரலாற்றில் முதன் முறையாக தேவாலயத்தின் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக அரசின் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ன்ஸ் ஆகிய மூவரும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் ரோம் சென்றுள்ளனர் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்